திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாவட்ட நீதிபதி ஆய்வு
திருவண்ணாமலை: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி,திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவிலை ஆய்வு செய்த நீதிபதி மகிழேந்தி, வரும், 30க்குள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், என கோவில் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி, நேற்று (செப்., 6ல்) ஆய்வு செய்தார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் மகளிர், முதியவர்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. கோவில் சுத்தமாக இல்லை. கோவில் ஊழியர்கள் சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்து, பணிக்கு வரவில்லை. தரமற்ற பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார். பின், அடிப்படை வசதிகளை, வரும், 30க்குள் நிறைவேற்றி, அறிக்கை அனுப்ப வேண்டும் என்று, கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு, அவர் உத்தரவிட்டார்.