உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாக்ஷி வரலாற்றினைக் கற்பலகை சிற்பங்கள்

மீனாக்ஷி வரலாற்றினைக் கற்பலகை சிற்பங்கள்

அன்னை ஸ்ரீ ராஜ மாதங்கியின் ஸ்ரீ மீனாக்ஷியின் கர்ப்ப கிரஹ வெளிப்பிரஹார நடைபாதைச்சுற்றில் அமைந்த சுவற்றில் தெற்கு, மேற்கு, வடக்கு, ஆகிய மூன்று சுவர்களிலும் தொடர்ச்சியாக நாற்பத்திரண்டு கற்பலகைகளில் அழகிய சிற்பங்களை கதை படிப்பதைப் போல் வடித்துப் பதித்திருக்கிறார்கள். இதனை வலம் வந்தபடி பார்த்து அறிந்து கொள்வதுடன் அவைகளின் வகைவகையான திருக்கோலங்களை மனத்தினுள்ளும் பதித்துப் போற்றுவோமாக.

தெற்குச்சுவர் தொடரில்:
சிவபெருமான், பார்வதி, விநாயகர், முருகக்கடவுள், குமரகுருபரர் வணங்குதல்
    1.      திருமால் ஆதிசேஷனைச் சுருட்டிச் செல்லுதல்
          2.      காப்பு பருவம்
          3.      மீனாக்ஷி காத்தல்
          4.      சப்த மாதர்களின் நடனம்

மீனாக்ஷி எழிலைக் காவல் புரிதல்

          5       மீனாக்ஷியை சீராட்டுதல்
          6.      விளையாடுகின்ற காட்சி
          7.      தலை அசைத்தல்
          8.      மீனாக்ஷி வளர்வது
          9.      மீனாக்ஷியைத் தாலாட்டுதல்

வடக்குச்சுவர் தொடரில்
          10.    தாலப்பருவம்
          11.    சேனைக் கடல் நடுவே மீனாக்ஷி
          12.    சப்பாணிக் கொட்டல்
          13.    சப்பாணிப் பருவம்
          14.    இமயம் முதல் குமரி வரை ஆட்சி

நிருத்யு (இரட்டை விநாயகர் சன்னதி வரிசையில்)

          15.    திருஞானசம்பந்தருக்கு பாலூட்டல்
          16.    மீனாக்ஷி யை முத்தமிடுதல்
          17.    முத்தப் பருவம்
          18.    பயிர்களை மேய்தல்
          19.    சங்க நிதி, பதும நிதி, சந்திரன்
          20.    இரதி மன்மதன்
          21.    கயல் மீன்கள் காட்சி

வருகைப் பருவம்

          22.    வெண்சாமரம் வீசுதல்
          23.    பிரிந்த பிரம்மா, விஷ்ணு மூம்மூர்த்திகள்
          24.    அம்புலியை மீனாக்ஷி அழைத்தல்
          25.    அம்புலிப் பருவம்
          26.    சந்திரனை ஆட அழைத்தல்

வாயு மூலை (முருகன் சன்னதி)
          27.    தேவ மாதர்கள் கோபம் தணித்தது
          28.    உமையை ஆட அழைத்தல்
          29.    அம்மானைப் பருவம்
          30.    சிவ பெருமான் கண்டுகளித்தல்
          31.    மீனாக்ஷி சேடியருடன் ஆடி அருளுதல்
          32.    சிவபெருமானுக்கு தூதுவிடல்
          33.    அம்பிகை நீராடுவது. சிவ பெருமான் கலந்தது
          34.    நீராடற் பருவம்
          35.    அன்னம், பறவை, தோகை மயில்
          36.    மண் சுமந்த துறை மீது மீனாக்ஷி கண்ணீர் வடித்தல்
          37.    இரதி மன்மதன் இந்திரன் வணங்குதல்
          38.    மீனாக்ஷி பொன்னூஞ்சல் ஆடும் காட்சி
          39.    ஊஞ்சல் பருவம். திருமுடி அசைக்க உலகமேயாடும் காட்சி
          40.    கயிலைங்கிரியில் திருமணக் கோலம்
          41.    பச்சைக்கிளி வளர்வது
          42.    திரு அவதாரம்
          43.    திருக்கல்யாணக் கோலம்
          44.    அருட்காட்சிக் கோலம்
          45.    திக் விஜயம்
          46.    திருமண வைபவம்

   இந்தக் கற்பலகைச் சித்திரங்கள் அன்னையைப் பற்றியதாகவே பெரிதும் இருக்கின்றன. அன்னையின் திருவிளையாடல் எனச் சிந்திக்க தோன்றியதோடு இவை காண முந்தித் தவம் கிடந்த பயனோவென சிந்தித்து நடந்த போது திருப்பள்ளியறை கண்டு நின்றோமே.  அகம் அழிந்து அவம் மறைந்து ஊழ்வினை ஓய்ந்து உவகையுடன் உற்சாக ஊற்றில் நனைந்து, மனமில்லா மனத்துடன் அங்கிருந்து கிளிக்கட்டு மண்டபம் வழியே ஒரு ஆன்மசாதனை பெற்ற பெருமிதத்தோடு வெளிவருகிறோம். கிளிக்கட்டு மண்டபம் வழியில் முத்து லிங்கமும், சின்னீஸ்வரர் கோயிலையும் பார்த்துத் தொழுகிறோம். ஆங்கே, மற்றொரு சாதனையாளர் கதைகேட்டு வருகிறோம். அவ்விடம் வலப்பக்கமுள்ள இறைவனுக்கு அமுதூட்ட அருட்பிரசாதங்கள் தயாரிக்கும் மடப்பள்ளியின் முன்னே.

ஊன்தேய குருதிகொட்ட எலும்பு கரைய தன்கை மூட்டையே தேய்த்து சந்தனமாக்கிய மூர்த்தி நாயனாரின் சரிதம் அது. அச்சரித்திர சாதனைக்கு துணை நின்ற சந்தனக்கல் இன்று சாட்சியாக நம்முன் நிற்கிறது. நான் என்பது அவனே. அவனின்றி அவனியில் ஏதுள! அடியார்களுக்காய் அவனும் அவ்வாலவாயனும் அலமலர்ந்து அவர்களுக்குத் தொண்டு செய்தவனல்லவா! அடியாருக்கும் அடியாரை என ஆட்கொள்ளும் அவனை அடைவதன்றோ... முக்திப்பேறு. சிவத்தினுடைய சித்த சைவம் என்பதும் அதுவன்றோ. அடியார்களை சிந்தித்தப்படி அங்குள்ள மடப்பள்ளிச் சாம்பலை அள்ளிப் பூசிக்கொள்கிறோம்.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே

-திருஞானசம்பந்தர்

நடுக்கட்டுக்கோபுரம் வழியாக அய்யன் சன்னதி 2-ம் பிராகாரம் நுழைகிறோம். அம்மன் கோயில்விட்டு ஸ்வாமி சன்னதி 2-ம் பிராகாரம் அடைய கி.பி. 1963-ல் அமைக்கப்பட்ட உள்வாசல் வழியும் இருக்கிறது

நடுக்கட்டு கோபுரம் வாசல் கடந்தவுடன் முக்குறுணி வினாயகரை தரிசிக்கிறோம். வல்வினை போக்கும் வேழமுகத்தவன், ஓங்காரத்தினுட்புகுந்து ""ஓம் ஆனவன். ஓலிவரவினன் திருத்தாண்டவ நாயகனின் டமருகத்தெழுந்த உடுக்கை ஒலியினால் இவ்வண்டம் அதிர்வும், அசைவும் பெற்று பிரபஞ்சத் தோற்றத்தின் உருவகங்களின் அடிப்படைப் பஞ்சபொருட்களை உருவாக்கக் காரணமான அவ்வொலியானவன். எட்டடி உயரம் கொண்ட இவருக்கு பிள்ளையார் சதுர்த்தி நாளில், முக்குறுணி, சற்றேறத்தாழ 18 லிட்டர் அரிசியை மாவுபடுத்திக் குழைத்து ஒரே கொழுக் கட்டையாக்கிப் படைக்கப்படுவது இன்றுவரை வழக்கத்தில் இருக்கிறது. காரணப்பெயரால் முக்குறுணி அரிசிப்பிள்ளையார் என அழைப்பதே சரியாகும்.

இப்பிள்ளையார் வீற்றிருக்க அமைந்தவிடமே சொக்கேசர் கோயிலின் இரண்டாம் பிராகாரம் திருச்சுற்று ஆகும். இம் மதிற்சுவரைக் கட்டிக்கொடுத்தவர் சுந்தபாண்டிய மன்னராகும். கி.பி. 1216-1238ன் காலத்தது இம்மன்னனின் பெயரே இம்மதிலுக்கும் வைக்கப்பட்டது. இதன் உள் மதிற்ச்சுவர் ""கபாலி மதில் எனப்படுவதாகும். திருஞானசம்பந்தர் பாடிய பாடலின் ஒருவரியில் ""கபாலிநீள் கடிம் மதில்கூடல் ஆலவாயிலாய் எனப் பாடல் பெற்ற பெருமை இக் ""கபாலி மதிலிக்குமாகும். 2-ம் பிராகாரத்தின் இடக்கைப்புறமாக முக்குறுணி விநாயகர் சன்னதியில் இருந்து மேற்காக வலம் வருவோம். தென்மேற்குப் பிரகார மூலையில் பரமசிவம் லிங்க சொரூப தரிசனம் செய்து அதன் தொடர்ச்சியாக ஐந்து லிங்கங்களையும், பலக கோபுரம் மூடிய வாயில் அருகே இரு லிங்கங்களையும் அவ்வாறே கோபுரம் கடந்து தொடரும் பிரகாரத்தில் நான்கு லிங்கங்களையும் காளத்தீஸ்வரரையும் தரிசித்தபடி மேற்குக் கோடியில் ஆதிபராசக்தி சிறு சன்னதி வழியே அன்னையை தரிசித்து தொடர்கிறோம். அங்கிருந்து பிரகார வடபுறத் தொடர்ச்சியில் முதலாவதாக கடைச்சங்கப் புலவர்களின் சன்னதி என அழைக்கப்படும் சங்கத்தார் மண்டபந்தனை கண்ணுற்று கடந்து பின் கூட்டு வழிபாட்டு மண்டபம் காண்கிறோம். தற்போது இம்மண்டபத்தே அருள்மிகு கல்யாண சுந்தரர் சன்னதி அழுகுற அமைக்கப்பெற்று ஆங்கே மேலும் பல அழகிய வண்ணச்சுதைகள் காட்சி தருகின்றன. இது பற்றிய தகல்கள் பின் காணலாம்.

தொடர்ந்து சின்ன மொட்டைக்கோபுரம் இதன் வாயிலும் உபயோகப்படுத்தப்படாமல் மூடியபடியே உள்ளது. பின் தீர்த்தத் தொட்டி கடந்து கிழக்குப் பிரகார துவக்கத்தில் மண்டப நாயகம் நூற்றுக்கால் மண்டபத்தைக் கண்டு மகிழலாம். இம்மண்டபத்தின் நடுவே நடராஜ மூர்த்தியை தரிசனம் செய்வோம். இந்த மூர்த்தி மரத்தால் செய்யப்பட்டதென்றும் ஒரு கூற்று உள்ளது. இதனை தற்காலம் தியான மண்டபம் என பெயரிட்டு உள்ளனர். இப்பெயரினை 2006ஆம் ஆண்டு ஸ்வார்த்தம் சத் சங்கம் என்ற அமைப்பு அங்கே தியானம் மற்றும் யோகம் பற்றிய பாடம் மற்றும் பயிற்சிகள் நடத்தி உபயோகப்படுத்தினர். அதன்பின் ஸ்வார்த்தம் சத் சங்க பெண் பயிற்சியாளர் திருமதி யசோதா வர்ஷனி அவர்கள், மற்றும் பலர் தொடர்ந்து அங்கு தியானம் மற்றும் யோக வகுப்புகள் நடத்தி வந்தனர். அப்போதைய திருக்கோவில் ஆணையர் திரு. பாஸ்கரன் அவர்கள். இத்திருக் கோவில் வருபவர்கள் அநேகர் இன்றும் இங்கு வந்தமர்ந்து தியானம் செய்து மன அமைதி பெற்றுச் செல்கிறார்கள். இதை ஒட்டிய நவக்கிரஹ நாயகர்கள் சன்னதியும் அமைந்துள்ளது. திருவாலவாயன் சன்னதியைச் சரணடையும் முன் நம் கண்கள் கம்பத்தடி மண்டபத்தைக் கண்ணுறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !