விநாயகர் சதுர்த்தி ஆயத்தம்: காப்பு கட்டி விரதம் துவக்கம்
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், மாலை அணிந்து, காப்புக்கட்டி விரதம் துவக்கினர். விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 13ம் தேதி நடக்கிறது. இதற்காக, இந்து முன்னணி சார்பில், திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படுகிறது.
வழிபாடுகளில் பங்கேற்கும் இந்து முன்னணி பகுதி வாரியான விழாக்குழுவினர் மற்றும் தொண்டர்கள் நேற்று விநாயகருக்கு மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். திருப்பூர், தாராபுரம் ரோட்டிலுள்ள, கோட்டை மாரியம்மன் கோவிலில், தொண்டர்கள் தங்களது கைகளில் காப்புக்கட்டி கொண்டனர்.இந்து முன்னணி மாநில செயலாளர்கள் கிேஷார்குமார், தாமு வெங்கடேஷன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்து, மாலை அணிந்து விரதம் துவக்கினர்.