மகிழ்ச்சிக்கு வழி தேடுங்கள்!
கர்த்தார் சிங் என்ற ஊழியர் திபெத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள லாமாக்கள் அவரைப் பிடித்து, கடுமையாக சித்திரவதை செய்தார்கள். ஒருநாள் அவருடைய சரீரத்திலே பழுக்க காய்ச்சிய கூர்மையான இரும்பு கம்பிகளினால் குத்தினார்கள். ஆனால், அவரோ வேதனையின் மத்தியிலும் கிறிஸ்துவை மறுதலியாமல் சந்தோஷமாய் கர்த்தரைத் துதிப்பதைக் கண்டதும், அவர்களுக்கு பெரிய ஆச்சரியமாய் இருந்தது. பிரதான லாமா அவரைப் பார்த்து, “நீர் இந்த பயங்கரமான பாடுகளின் நேரத்திலும் மகிழ்ச்சியாய் இருப்பதின் ரகசியம் என்ன?” என்று கேட்டார். அதற்கு கர்த்தார்சிங், “ஐயா! எனக்குள் ஒரு நதி
பாய்கிறது. அது பேரின்பநதி. அது எனக்குள் ஓடுகிறபடியினால் இந்த வெப்பத்தால் பழுத்த கம்பியின் வேதனையை எல்லாம் தணித்து, குளிரப்பண்ணி என்னைச் சந்தோஷப்படுத்துகிறது,” என்றார்.தேவபிள்ளைகளே, துன்பமும் வேதனையும் நிறைந்த இந்த உலகத்தில் வாழும் உங்கள் இருதயத்திலே உங்களைச் சந்தோஷப்படுத்தும் பரிசுத்த ஆவியாகிய இந்த பேரின்பநதி ஓடட்டும்! அது நித்திய பேரின்பத்தை உங்களுக்குள் கொண்டு வரட்டும். நித்திய மகிழ்ச்சியினால் உங்களை மூடிக்கொள்ளட்டும்.