ஆன்மிக ரகசியம்!
சீனநாட்டு வாலிபர்களிடையே ஒழுக்கக்குறைவு அதிகரித்தபோது, அந்த தேசத்தலைவர் சொன்னார், “நாம் நம்முடைய வாலிபர்களுக்கு கற்றுக் கொடுக்க மறந்து போன ஒரு காரியம் ஆன்மிக வாழ்க்கையின் ரகசியம் தான். அந்த மெய்யான சந்தோஷத்தை அறியாததினால் தான் வாலிபர்கள் சிற்றின்பங்களைத் தேடி சீர்கெட்டுப் போனார்கள்,” என்றார். எத்தனை உண்மை! சிற்றின்பம் தாகத்தை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் தணிக்கவே தணிக்காது. இதிலிருந்து விடுபட, இயேசுகிறிஸ்து தம் தெய்வீக பிரசன்னத்தைத் தந்து நம்மை தம்முடைய ஆவியினால் நிரப்ப ஆவலாய் இருக்கிறார். பேரின்ப நதியைக் கொடுத்து தாகம் தீர்க்க நம்மை அன்போடு அழைக்கிறார். “தாகமாய் இருக்கிறவன் என்னிடத்தில் வரக்கடவன்” என்று அவர் சத்தமிட்டு சொல்லுகிறதை கேளுங்கள். அவர் கொடுக்கும் தண்ணீர் ஜீவத்தண்ணீர். அவர் கொடுக்கும் அபிஷேகம் ஜீவநதி. வேதத்தின் கடைசி அத்தியாயத்தில் கடைசி பக்கத்தில் கூட, “தாகமாய் இருக்கிறவன் வரக்கடவன். விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ள கடவன்” என்ற கர்த்தர் அழைத்திருக்கிறார்.