செஞ்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கொள்ளை : ஜெயின் கோவிலில் அதிர்ச்சி
செஞ்சி: செஞ்சி அருகேபழமையான ஜெயின் கோவிலில் பூட்டை உடைத்து, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆறு ஐம்பொன் சிலைகளை கொள்ளை அடித்துசென்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 30க்கும் மேற்பட்ட பழமையான ஐம்பொன் சிலைகள் உள்ளன.ஜெயின் சமூகத்தினர், கோவிலை பரிபாலனம் செய்து வருகின்றனர்.கோவில் எதிரில் வசிக்கும் சந்திரன், 65 என்பவர், கோவிவில் துப்புரவு பணிகளை செய்து வருகிறார். நேற்று முன்தினம் (செப்., 15ல்) இரவு, 7:00 மணியளவில், சந்திரன் கோவிலை பூட்டினார்.இரவு முழுவதும், இப்பகுதியில் பலத்த மழை காரணமாக, மின் வினியோகம் தடைபட்டது.வழக்கமாக, வீட்டு திண்ணையில் தூங்கும் சந்திரன், மழை பெய்ததால், உள்ளே சென்று தூங்கினார்.
நேற்று (செப்.,16ல்) அதிகாலை, 5:00 மணிக்கு, கோவிலை சுத்தம் செய்ய, சந்திரன் பிரதான கதவை திறந்து உள்ளே சென்றார். மின்சாரம் இல்லாததால், டார்ச் அடித்து பார்த்த போது, கருவறையின் இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு, அடுத்து இருந்த மரக்கதவும் திறந்து கிடந்தது.அதிர்ச்சியடைந்த சந்திரன், உள்ளே சென்று பார்த்த போது, ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு இருந்தன.கோவில் நிர்வாகிகள் வந்து சரிபார்த்த போது, தரனேந்திரன், பத்மாவதி, ஜவாலாமாலினி, பார்சுவநாதர் சிலைகள், இரண்டு மல்லிநாதர் சிலைகள் திருடு போனது தெரிந்தது.
திருடுபோன மல்லிநாதர் சிலைகள், 2008ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது, புதிதாக வாங்கியவை ஆகும்.அரை அடி முதல், 2 அடி வரை உயரமுள்ள, ஆறு சிலைகளும், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளவை என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.எஸ்.பி., ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் ராக்கி, கோவிலில் இருந்து, இரண்டு தெருக்கள் சுற்றி வந்து, ஒரு மரத்தின் கீழ் நின்று விட்டது.செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சுவரில் துளை போட முயற்சி : கொள்ளையர்கள் முதலில் கோவில் பூட்டை உடைக்காமல் கருவறையின் செங்கல் சுவரில் துளை போட்டு உள்ளே செல்ல திட்டமிட்டு வடக்கு பக்க சுவரில் கருங்கல் ஜன்னல் பக்கத்தில் இடித்துள்ளனர்.ஆனால் சுவர் பலமானதாக இருந்ததால் இடிக்க முடியாமல் பூட்டை உடைத்துள்ளனர்.
2 ஐம்பொன் சிலைகள் திருட்டு : திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று முன்தினம் (செப்., 15ல்) இரவு கோவிலை பூட்டிச் சென்ற பூஜாரி நேற்று காலை வந்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது 1.25 அடி உயரமுள்ள ஐம்பொன் சாய்பாபா சிலை, 1 அடி உயரமுள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை திருட்டு போனது தெரிந்தது. இரு சிலைகளும் 50 கிலோ எடை கொண்டது. மேலும் இதே பகுதியில் உள்ள டீக்கடை, மளிகை கடை, பெயின்ட் கடைகளின் பூட்டை உடைத்து பணம், சிகரெட் பாக்கெட்டுகள், மளிகை பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கலசபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாதுகாப்பு இல்லை : செஞ்சி பகுதியில் மூன்று முதல் 13ம் நூற்றாண்டு வரை சமண சமயம் அதிகம் பரவி இருந்தது. இங்குள்ள மேல்சித்தாமூர் கோவிலும், மடமும் தமிழக சமணர்களின் தலைமையிடமாக உள்ளது. செஞ்சியை ஒட்டியுள்ள பல ஊர்களில் ஜெயின் கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் உள்ளன. சில ஆண்டுகளில் எய்யில் ஏதாநெமிலி கோவில்களில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளன. எனவே மற்ற கோவில்களில் பாதுகாப்பு இல்லாமல் உள்ள சிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.