தர்மபுரி புரட்டாசி மாதம் பிறப்பு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :2577 days ago
தர்மபுரி: புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று (செப்.,17ல்), சிறப்பு பூஜை, அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.
தர்மபுரி கடைவீதி, பிரசன்னவெங்கட்ரமன சுவாமி கோவிலில் நேற்று (செப்., 17ல்) காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, 64 வகையான ஆகம பூஜைகள், 1,008 அர்ச்சனைகள் நடந்தன. உற்சவ மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், கோட்டை பரவாசுதேவர் கோவில், அதகபாடி லட்சுமி பரவாசுதேவர் கோவில், மூக்கனூர் சென்றாய பெருமாள் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.