உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி அக்னி விநாயகர் கோயில் அருகில் முன்பு குவியும் குப்பை

சிவகாசி அக்னி விநாயகர் கோயில் அருகில் முன்பு குவியும் குப்பை

சிவகாசி:சிவகாசி கிழக்கு ரத வீதி விலக்கில் அக்னி விநாயகர் கோயில் அருகில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.

சிவகாசி கிழக்கு ரத வீதியில் இருபுறமும் 100 கடைகளுக்கு மேல் உள்ளன. கிழக்கு ரத வீதி விலக்கில் அக்னி விநாயகர் கோயில் உள்ளது. இப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் குப்பைக் கழிவுகளை கோயில் வாசலில் கொட்டுகின்றனர். கோயிலுக்கு முக்கிய நாட்கள் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் காலையில் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

அவர்கள் கோவிலுக்குச் செல்ல குப்பையைத் தாண்டியே செல்ல வேண்டியுள்ளது. மன நிம்மதிக்காக சாமி கும்பிட வருபவர்கள் நிம்மதியின்றி செல்கின்றனர். மேலும் இங்கு கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து ரோட்டிற்கும் வந்து விடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

கடைகளின் குப்பையை கடையின் முன்புறம் வைத்தால் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வந்து எடுத்துச் சென்று விடுவர். கடைக்காரர்கள் அவ்வாறு செய்யாமல் கோவில் அருகிலேயே கொட்டுகின்றனர். இதேபோல் சிவன் கோயில் வளாக முன்புறத்தில் கடைகளின் பாலீதீன் பைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுகின்றனர். இங்கும் சாமி கும்பிட வருகின்ற பக்தர்கள் அருவருப்புடன் செல்கின்றனர்.

நகராட்சியிலிருந்து குப்பையை அகற்றினாலும், இப்பகுதி கடை உரிமையாளர்கள் பொறுப்பின்றி மீண்டும் மீண்டும் தங்களது கழிவுகளை திறந்த வெளியில் கொட்டி அசுத்தமாக்குகின்றனர் என இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !