சபரிமலையை சுற்றுலாதலமாக்க கூடாது : தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கருத்து
சபரிமலை : சபரிமலையை தாய்லாந்து போல சுற்றுலாத்தலமாக மாற்றக்கூடாது என தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறினார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் முயற்சித்து வருகின்றன. இதற்கு எதிராக கேரளாவில் பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது: சபரிமலையை தாய்லாந்து போல சுற்றுலா தலமாக மாற்றக்கூடாது. சபரிமலைக்கு பெண்கள் வந்தால் நான் சபரிமலைக்கு செல்ல மாட்டேன். தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் அரசியல் இல்லை. தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், கேரள மாநில அரசும் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். சபரிமலைக்கு வந்தால் அவர்களை புலி மட்டுமல்ல புருஷனும் பிடித்து செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அட்டர்னி ஜெனரல்:அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியது: சபரிமலை விஷயத்தில் பெண்கள் மற்றும் பக்தர்களின் மனநிலையை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் போராட்டத்தில் இறங்குவார்கள் என்று நீதிமன்றம் சிந்தித்திருக்காது. தெய்வ கோபம் வரும் என்று கேரள மக்கள் அஞ்சுகின்றனர், என்றார்.
மேல்சாந்தி நேர்முகத்தேர்வு சபரிமலை மேல்சாந்தி நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கமிட்டியில் தன்னையும் சேர்க்க கேட்டு தந்திரி கண்டரரு மோகனரரு கொடுத்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.