உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலை கோவில் சிலைகள் மாயம் பெண் அதிகாரியிடம் விசாரணை

மயிலை கோவில் சிலைகள் மாயம் பெண் அதிகாரியிடம் விசாரணை

 சென்னை:மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், மூன்று சிலைகள் மாயமானது தொடர்பாக, அறநிலையத் துறை கூடுதல் கமிஷனர், திருமகளிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில்,  2004ல், கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடந்த போது, புன்னைவனநாதர், ராகு, கேது ஆகிய, மூன்று சிலைகள் மாயமாகின. அந்த சிலைகள் மாற்றப்பட்டதாகவும், அவை கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், விசாரணையை துவக்கினர். சில தினங்களுக்கு முன், கபாலீஸ்வரர் கோவிலில் சோதனை நடத்தினர்.  அப்போது, சிலைகள் மாற்றப்பட்டு, வேறு சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின், அறநிலையத்துறையின் ஆஸ்தான ஸ்தபதி முத்தையாவிடம், விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், 2004ல், கோவிலில் நிர்வாக அதிகாரியாக இருந்தவருக்கும், பல முக்கிய பிரமுகர்களுக்கும், சிலைகள் மாயமானதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, 2004ல், அறநிலையத் துறை இணை கமிஷனராக இருந்தவரும், தற்போது, கூடுதல்  கமிஷனராக உள்ளவருமான, திருமகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை, வியாசர்பாடி, கலைஞர் நகர், 6வது தெருவில் வசிக்கும், கூடுதல் கமிஷனர் திருமகள் வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, கூடுதல் எஸ்.பி., அசோக் நடராஜன்,  டி.எஸ்.பி., குமார் தலைமையிலான போலீசார், இரண்டு பெண் போலீசார் உதவியுடன், நேற்று காலை, 11:30 மணி முதல், 12:00 மணி வரை விசாரணை நடத்தினர். சிலைகள் பதுக்கப்பட்டுள்ளதா; வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதா என, அவரிடம் பல கேள்விகள்  கேட்கப்பட்டுள்ளன.இந்த விவகாரத்தில், பல முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதால், கூடுதல் கமிஷனர் திருமகளிடம், மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !