உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்பே வாழ்வின் ஆதாரம்

அன்பே வாழ்வின் ஆதாரம்

மதினா நகரின் தெருவில் சீடர்களுடன் நடந்தார் நபிகள் நாயகம். வழியிலுள்ள ஒரு தோட்டத்தில் யாரோ முனங்கும் சப்தம்  கேட்கவே சுற்றிப் பார்த்தார். யாரும் தென்படவில்லை. அருகில் இருந்த மரக்கிளைகளை விலக்கிய போது, சற்று தூரத்தில் எலும்பும் தோலுமாக ஒட்டகம் ஒன்று நிற்பது தெரிந்து,   அதனருகில் செல்ல  சீடர்களும் பின்தொடர்ந்தனர். ஒட்டகத்தை நெருங்க நெருங்க முனகல் சத்தம் அதிகரித்தது. அன்புடன் தடவிக் கொடுத்து அதன் கண்ணீரைத் துடைத்தார்.

பசியால் தவித்த அது, தன் தலையை நாயகத்தின் பக்கம் சாய்த்தது. அதன் கண்களை உற்றுப் பார்த்த அவர், ஏதோ புரிந்தவராக சீடர்கள் மூலம் ஒட்டகத்தின் உரிமையாளரை வரவழைத்தார். “இந்த ஒட்டகம் உங்களுடையது தானே?” “ஆம் ஐயா” “இதன் தேவையை பூர்த்தி செய்வது உங்களின் கடமையல்லவா?” “ஆம்...அதில் என்ன சந்தேகம்?” “ எனக்கும் சந்தேகமில்லை” உரிமையாளர் குழப்பமுடன் பார்த்தார். “இந்த ஒட்டகம் இளமைக்காலத்தில் கடுமையாக உழைத்தது தானே?” “ஆமாம்” “அப்போது தேவையான உணவு கொடுத்தீர்கள் அல்லவா?” “ஆமாம்” “பின் ஏன் இப்போது இதைப் புறக்கணிக்கிறீர்கள்? வயதாகி விட்டதாலா?”பேச முடியாமல் உரிமையாளர் தலைகுனிந்தார். “பயன் கருதி பிறருக்கு உதவுவது கீழான குணம். அதிலும் வாயில்லாத ஜீவனிடம் சுயநலத்துடன் இருப்பது பாவத்திலும் பாவம்” “என்னை மன்னியுங்கள் ஐயா” “உங்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை. வாழ்வின் ஆதாரமான அன்பை மட்டும் எதிர்பார்க்கிறோம்” என்று சொல்லி  ஒட்டகத்தின் நெற்றியில் நாயகம் முத்தமிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !