நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி கொடியேற்றம்
நத்தம்:நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி நேற்று (நவம்., 8ல்) காலை மகா கணபதி பூஜை நடந்தது. கொடிக் கம்பம் மற்றும் உற்சவர் சிலைக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் நீர், குங்குமம், விபூதி, திருமஞ்சனம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து கந்த சஷ்டி மகோத்ஸவ திருக்கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து செந்தமிழ் வேள்வி மற்றும் நூறாயிரம் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி திருவுலா சென்றார். பகலில் அன்னதானம் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். நவ.13 ல் சூரசம்ஹாம் நடக்கிறது.சின்னாளபட்டி: கந்த சஷ்டி விழா துவக்கத்தை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நான்குமுக முருகனுக்கு பாலாபி ஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மகா தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி அருகே தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.