பழநியில் சிலைகள், தூண்களை ஆய்வு செய்த வல்லுனர் குழு
பழநி:பழநி முருகன்கோவிலில் கும்பாபிேஷக பணிகள் தொடர்பாக, சிலைகள், கற்தூண்களை, பொறியாளர்கள், தொல்லியல் துறையினர், ஸ்தபதி அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலில், 2006ல் கும்பாபிேஷகம் நடந்தது. 12 ஆண்டுகள் முடிந்துள்ளதால், கும்பாபிேஷக திருப்பணி துவங்க உள்ளது.மலைக்கோவிலின் பழமை மாறாமல் தேய்மானம், சேதமடைந்துள்ள கற்சிலைகள், தூண்கள், சுதைகள் புதுப்பிக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக ஆலோசனை வழங்க நேற்று (நவம்., 8ல்),பொறியாளர்கள், தொல்லியல் துறையினர், ஸ்தபதி அடங்கிய குழுவினர் வந்தனர்.
அவர்கள் மலைக்கோவில் மேல்தளத்தில் ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் வெளி, உட்பிரகாரங்கள், படிப்பாதை, யானைப்பாதைகளில் கற்சிலைகள், மண்டபத்தூண், சுதைகளை ஆய்வு செய்தனர்.இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், வல்லுனர் குழு அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் கோவில் திருப்பணி குழுவிடம் சமர்ப்பிக்கும். அக்குழுவினர் அனுமதி வழங்கியபின் திருப்பணிகள் துவங்கும், என்றார்.