ஆத்தூர் பாலசுப்ரமணியர் கோவில் ரூ.30 லட்சத்தில் பொலிவு
ஆத்தூர்: பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 30 லட்சம் ரூபாயில், புனரமைப்பு பணி நடக்கிறது. ஆத்தூர் அருகே, வடசென்னிமலை, பாலசுப்ரமணியர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின், 2019 பிப்., 10ல், கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.
அதற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், இரு மாதங்களுக்கு முன், புனரமைப்பு பணியை தொடங்கினர். தற்போது, மஹா மண்டப மேல் தள பகுதியை சீரமைத்து, கோபுரம் மற்றும் சன்னதிகளில் வண்ணம் பூசுதல், தார்ச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, செயல் அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது: அரசின், எட்டு லட்சம் ரூபாயில், 57 அடி உயர ராஜகோபுரம், இரு மண்டபங்கள் புனரமைக்கப்படுகின்றன. நன்கொடையாளர்கள்
மூலம் வசூலித்த, 22 லட்சம் ரூபாயில், மூலவர், இடும்பன், விநாயகர் உள்பட ஐந்து சன்னதிகள், கோபுரம், மற்ற இரு மண்டபங்கள், 2 கி.மீ., மலைவழிப்பாதையில் தார்ச்சாலை
உள்ளிட்ட பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.