நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!
* இன்றைய அறிவியல் உலகம் பேராசையை தூண்டி அலைக்கழிக்கிறது. ஆசைகளை சீர்படுத்தினால் தான் உள்ளத்தில் நற்பண்புகள் குடியிருக்கும். அப்படிப்பட்டவர்கள் நாடு போற்ற நல்வாழ்வு நடத்துவர்.
* கடவுளே காலத்தின் வடிவம். நேரமே அவரது உடலாக இருக்கிறது. வாழ்நாளில் விநாடி நேரத்தையும் வீணாக்கக் கூடாது.
கடமையைச் செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன் பூமிப்பந்திற்கு பாரமாகி விடுவான்.
* காரணமின்றி எதுவும் உலகில் படைக்கப்படவில்லை. நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார்.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதைக் கேட்பது தியானம். ’எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு’ என வழிபாடு செய்யுங்கள்.
* வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல்கள் எல்லாம் கடவுளுக்குரிய அர்ச்சனை. அவரது திருநாமத்தைச் சொல்வதை விட சிறந்த வழிபாடு இல்லை.
* குளிருக்கு கம்பளியை போர்த்திக் கொள்வது போல் துன்பம் அதிகரிக்கும் போது கடவுளை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.
பிறர் நலனில் அக்கறை செலுத்துவதே கடவுளின் அருள் பெறும் வழி. அவருக்கு உண்மையின் பாதையில் நடப்பவர்களை மட்டுமே பிடிக்கும்.
* ஒவ்வொரு மூச்சு விடும் போதும் கடவுளைச் சிந்தியுங்கள். நீங்கள் விரும்பியதை வழங்க அவர் தயாராக இருக்கிறார்.
முற்றிய தேங்காயே கடவுளுக்கு தகுதியுடையது போல பக்குவம் பெற்ற உள்ளம் கடவுளின் திருவடியை அடையும் தகுதியை பெறுகிறது.
* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே நிறைவான மகிழ்ச்சி. கருணையே சிறந்த புண்ணியம். கடவுளின் திருநாமமே பேரின்பம்.
உலகில் குழப்பங்கள், பிரச்னைகள் அதிகரிக்க காரணம், ஆன்மிக சிந்தனை குறைந்து வருவது தான்.
* உலகம் முழுவதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியான வகையில் வாழ்வு நடத்த வேண்டும். வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் உணர்ந்தறிய வேண்டும்.
* தாய், தாய்நாடு, தாய்மொழியை வெளிநாடு சென்றாலும் மறக்காமல் மதித்து நடக்க வேண்டும்.
* தவறான விஷயங்களில் ஈடுபடுவது மனிதப் பண்பு அல்ல. நற்பண்புகளால் மட்டுமே வாழ்க்கை மேம்படுகிறது.
* நல்லவர்களின் பெருமையை கீழானவர்களின் பழிச்சொற்களால் ஒன்றும் செய்து விட முடியாது.
* மற்றவர்களிடம் உள்ள நல்லதை மட்டுமே காண வேண்டும். மற்றவரின் குறைகளைக் காணும் போது பெருந்தன்மையுடன் மன்னிக்க முயலுங்கள்.
- வாழ்த்துகிறார் சாய்பாபா