உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூக்களை விரும்பும் அண்ணாமலையார்!

பூக்களை விரும்பும் அண்ணாமலையார்!

திருவண்ணாமலை தீபத்திருநாள் மிகவும் பழமையானது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கூடியதையும், அனைவருக்கும் உணவு, தங்குமிடம் அளிப்பதற்காக தர்ம சத்திரங்கள் இருந்ததையும் அண்ணாமலையார் கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. துறவிகள் நிறைந்த ஊராக இத்தலம் இருந்த தால், ஆண்டிகள் மிகுந்தது அண்ணாமலை என்ற பழமொழியும் உண்டானது. இங்கு வரும் சிவபக்தர்களை அண்ணாமலை திருக்கூட்டத்தார் என்றனர். இவ்வூரில் உள்ள கோயில்களில் பூஜை செய்வதும், நந்தவனங்களில் மலர் பறிப்பதும் இவர்களது பணியாக இருந்தன. இன்றும், திருவண்ணாமலை கோயிலில் சில அடியவர்கள் மாலை கட்டும் பணி செய்கின்றனர். பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் என்று அருணாசல சிவன் பூமாலை விரும்புவதை போற்றுகிறார் ஞானசம்பந்தர்.

உருண்டே கிரிவலம் வந்தவர்: திருண்ணாமலையை நடந்து வலம் வருவதற்குள்ளாகவே கால் வலிக்க ஆரம்பிக்கும். ஆனால், அண்ணாமலை சுவாமி என்பவர், அங்கப்பிரதட்சணம் செய்து மலையை வலம் வருவார். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இவர், சிவாயநம, ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை ஜெபித்தபடியே பிரதட்சணம் செய்வது வழக்கம். நாயன்மார் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். கார்த்திகைதிருவிழாவின் ஆறாம்நாள் நடக்கும் அறுபத்துமூவர் விழாவில், தான் கட்டிய மடாலயத்தில் அன்னதானமும் செய்தார்.

விளக்கேற்றினால் வீடு தேடி வருவார்: திருவண்ணாமலையில் மலைதீபம் ஏற்றும்போது பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்று கோஷமிடுவர். நாம் வீட்டில் விளக்கேற்றும் போதும், அண்ணாமலையை மனதில் சிந்தித்தபடி விளக்கேற்ற வேண்டும். திருவிளக்கு குறித்த பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். கார்த்திகை பொரி உருண்டை, பிடி கொழுக்கட்டை, பழம், கல்கண்டு, பால் நிவேதனம் செய்யலாம். இம்முறையில் வழிபட்டால் அண்ணாமலையார் நம் வீட்டுபூஜைக்கு எழுந்தருள்வார்.

ஏழு பிரகாரமா எடுத்துக்கலாம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. திருவண்ணாமலை கோயிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. கிரிவலப்பாதையையும் சேர்த்தால் ஏழு பிரகாரம் உள்ளதாகக் கொள்ளலாம். சிவபெருமானின் தலைநகர் என்று இந்த ஊரை வர்ணிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !