ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருவொற்றியூர்: ஆதிபுரீஸ்வரர் சுவாமியை கவசமின்றி, இவ்வாண்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் ஆதிபுரீஸ்வரர், கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுக்கு, மூன்று தினங்கள் மட்டுமே, கவசமின்றி, ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்ய முடியும். இவ்வாண்டு, 22ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, கவசம் திறந்து, புணுகு சாம்பிராணி, தைலாபிஷேகம், மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 23ம் தேதி மற்றும் நேற்று முன்தினம் இரவு வரை, மூலவரான ஆதிபுரீஸ்வரரை, கவசமின்றி பக்தர்கள் தரிசித்தனர். நேற்று முன்தினம், கடைசி நாள் என்பதால், பக்தர்களின் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது.இரவு, 10:00 மணிக்கு, அர்த்தஜாம பூஜைக்கு பின், ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது. இவ்வாண்டு, ஆதிபுரீஸ்வரை கவசமின்றி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், தரிசனம் செய்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.