சேலத்தில் தாயார் பிரம்மோற்சவ விழா: பெண்கள் இழுத்த பூப்பல்லக்கு தேர்
சேலம்: வெங்கடாஜலபதி கோவில் தாயார் பிரம்மோற்சவத்தில், ஏராளமான பெண்கள், பூந்தேரை இழுத்து வந்தனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி கோவிலில், திருமலை திருப்பதி கோவிலை போல், இங்கும் பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவங்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.
15ம் ஆண்டாக தாயார் பிரம்மோற்சவம் கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று (நவம்., 27ல்) காலை, பத்மாவதி தாயார் மகாலட்சுமி அலங்காரத்தில் பூந்தேரில் எழுந்தருளி சேவை ஸாதித்தார். தாயார், படி தாண்ட மட்டார்கள் என்பதால், பூந்தேர்
கோவிலை மட்டும் வலம் வரச்செய்வர். இதை ஏராளமான பெண்கள், வடம் பிடித்து இழுத்து வந்தனர். மதியம், 12:00 மணிக்கு மூலவர் பத்மாவதி தாயாருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம்
நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையையொட்டி, தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (நவம்., 28ல்) காலை தோளுக் கினியானில், தாயார் சர்வ அலங்காரத்தில் கோவில் உலா வருவார்.
மாலை பட்டாபிராமன் அலங்காரத்தில், தாயார் சேவை ஸாதிப்பார். இரவு கண்ணாடி மாளிகையில் எழுந்தருள்வார். நாளை (நவம்., 29ல்) காலை துவாதச ஆராதனை, புஷ்ப யாகம் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு திருப்பாவாடை உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.