குறையில்லாதவர் யார்?
போதகர் டி.எல்.மூடி பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த கல்விமான் ஒருவருக்கு பொறுக்க முடியவில்லை. காரணம் மூடியின் ஆங்கிலப்பேச்சில் இலக்கணப்பிழைகள், உச்சரிப்பு தவறுகள் நிறைய இருந்தன. கூட்டம் முடியட்டும் எனக் காத்திருந்தார். கூட்டம் முடிந்ததோ இல்லையோ மேடைக்கு ஓடினார்.
“நீர் என்ன பேசுகிறீர்! உச்சரிப்பில் பிழை, இலக்கணத்தில் பிழை, ஏன் ஆங்கிலத்தைக் கொலை செய்கிறீர்?” என கடுமையாகக் கேட்டார். அமைதியுடன் மூடி, “ஐயா! நான் அதிகம் படித்தவனோ, சிறந்த பேச்சாளனோ கிடையாது. கடவுள் பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டும் என நினைத்தேன், பிரசங்கித்தேன். சரி...என்னை விடுங்கள். நீங்கள் தான் இலக்கணம் தெரிந்தவராயிற்றே! அறிவு முதிர்ச்சியுடையவர் ஆயிற்றே! உங்களுக்கு அறிவும், புலமையும் தந்த கடவுளைக் குறித்து ஒருநாளாவது பேசி இருக்கிறீர்களா?” எனத் திருப்பிக் கேட்டார். பதிலளிக்க முடியவில்லை. அப்போது தான் தன் மீதுள்ள குறையை உணர்ந்தார் கல்விமான். “மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே (நினைப்பவனே)! நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை,” என்று பைபிளில் வசனம் இருக்கிறது. “மற்றவரிடம் குறை காண்பவர்கள் தங்களிடமும் குறை வைத்திருப்பர்” என்பது இதன் பொருள். எனவே குறை காணும் பழக்கத்தை விட்டொழிப்போம்.