உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்திக்கு ஏழ்மை தடையல்ல!

பக்திக்கு ஏழ்மை தடையல்ல!

போதகர் ஒருவர் பிரசங்கம் செய்ததை மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு சிறுவனுக்கு பத்து வயதிருக்கும். அழுக்கடைந்த உடை அணிந்திருந்தான்.  ஏழ்மையை அவனது தோற்றமே வெளிப்படுத்தியது.  போதகரிடம் வந்த அவன் கடவுளைப் பற்றிய சில சந்தேகங்களைக் கேட்டான். அவர் கொடுத்த சில புத்தகங்களை வாங்கிக் கொண்டான். சற்று துாரம் சென்று அமர்ந்து அவற்றை வாசிக்க ஆரம்பித்தான்.  அவன் என்ன செய்கிறான் என்பதை போதகரும் கவனித்தார். எங்கும் திரும்பாமல், அவன் கவனமாகப் படித்தான். வாசித்ததும், அவன் போதகரிடம் மீண்டும் வந்தான். அவனிடம் கந்தல் மூடை ஒன்று இருந்தது. அதைப் பிரித்து ஏதோ ஒரு தாளை எடுத்தான். அது பதினாறு மடிப்பாக இருந்தது.  அதை கொடுத்து,“ ஐயா! இதை கடவுளுக்கு நான் செலுத்தும் காணிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். என்னிடத்தில் இருப்பது இவ்வளவு தான்” என்றான். அது ஒரு ஐந்து ரூபாய் நோட்டு. அவனுடைய வறுமையைப் பார்த்த போதகருக்கு வாங்க மனமில்லை. கண்ணீர் துளிர்த்தது. அதைக் திருப்பிக் கொடுப்பதற்காக கையை நீட்டிய வேளையில்,“இதை அவன் எனக்கு கொடுக்கவில்லை. கடவுளுக்கு கொடுக்கிறான். அப்படியானால்  இதை மறுக்கும் உரிமை எனக்கில்லை. ஆண்டவரே! இந்தச் சிறுவன் தரும் பணத்தை, உம்முடைய கைகளே வாங்கிக் கொள்ளட்டும். நீர் அவனை ஆசிர்வதிக்க வேண்டும்” என ஜெபித்தார். பக்திக்கு ஏழ்மை தடையல்ல. நல்ல மனமிருந்தால் ஆண்டவர் ஆசிர்வதிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !