உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மத்தின் தலைவன்

தர்மத்தின் தலைவன்

விறகுவெட்டி ஒருவன் வறுமையில் வாடினாலும் பசி என வருவோருக்கு முடிந்ததை கொடுத்தான். ஆனால் அவனது மனைவிக்கு விருப்பமில்லை. ஒருநாள் காட்டுவழியே சீடர்களுடன் வந்த நபிகள் நாயகத்தைக் கண்ட விறகுவெட்டி, தன் நிலையை எடுத்துச் சொன்னான். “ஏழையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள். எப்பொழுது பணக்காரனாக ஆகிறாயோ அப்போது இறப்பாய்” என்றார். அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவன், மறுநாள் வழக்கம் போல விறகு வெட்டச் சென்றான். புதரின் மறைவில் பெட்டி ஒன்றை கண்டான். அதில் தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்கள் மின்னின. ஒரு நொடிப்பொழுதில் கோடீஸ்வரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தாலும், நாயகம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் செல்வத்தை இழக்க மனமில்லை. சட்டென யோசித்தவனாக நல்ல மனம் கொண்ட தன் நண்பரின் வீட்டிற்கு சென்றான். நடந்தை எல்லாம் விவரித்த அவன், “நான் செல்வந்தனாக மாறினால் தானே இறப்பு வரும். இது மக்களுடையது என நினைத்து வறியவர்களுக்கே செலவு செய்வேன்” என தெரிவித்தான். சுயநலம் இன்றி ஏழைகளுக்கு கொடுக்கச் செய்தான். தர்ம சிந்தனையால் புகழ் பெற்றான். உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை என்ன செய்கிறீர்கள் என கடவுள் சோதிப்பார். எனவே ஏழைகளுக்கு கொடுங்கள். ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு கடவுளின் கருணையே காரணம். அவரே தர்மத்தின் தலைவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !