காஞ்சிபுரம் கோவில்களில் லட்ச தீபம் திருவிழா
ADDED :2528 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பல்வேறு கோவில்களில், நேற்று லட்ச தீப திருவிழா விமரிசையாக நடந்தது.கார்த்திகை மாதம், நான்காவது வார சோமவாரத்தையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் , சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், கண்ணப்பன் தெரு காசிபேஸ்வரர் கோவில் மற்றும் கோட்ராம் பாளையம் தெரு விநாயகர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் நேற்று (டிசம்., 10ல்) லட்சதீப திருவிழா நடந்தது.
இதில், ஏகாம்பரநாதர் கோவிலில் விழாவையொட்டி, மகாஅபிஷேகமும், 108 சங்காபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் நந்தி மண்டபம் முதல், உட்பிரகாரங்களில் உள்ள சன்னிதிகளில் நெய்விளக்கு தீபமேற்றி பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். இதனால், ஏகாம்பரநாதர் கோவில் பிரகாரம் முழுவதும் தீபஜோதி மயமாக காட்சியளித்தது.