சபரிமலை உண்டியல் எண்ணியதில் முறைகேடு: தணிக்கை துறை
திருவனந்தபுரம்:மண்டல, மகர ஜோதி உற்சவ காலத்தில், சபரிமலை அய்யப்பன் கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் மற்றும் தங்க பொருட்களை எண்ணும் போது, முறைகேடுகள் நடந்துள்ளதாக நிதி தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரஜோதி உற்வச காலத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், கோவிலில் உள்ள உண்டியல்களில், காணிக்கைகளை செலுத்துகின்றனர். பணமாக மட்டுமின்றி, தங்கம், வெள்ளி போன்ற பொருட்களையும் உண்டியலில் போடுகின்றனர்.பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை எண்ணுவதற்கு வசதியாக, கோவிலில் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு திருவிதாங்கூர் தேவஸ்தானத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அவற்றை எண்ணி, உடனுக்குடன் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் வங்கியில் டிபாசிட் செய்வர். இது தான் நடைமுறை. இவ்வாறு காணிக்கையாகச் செலுத்திய பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை எண்ணும்போது முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், அவ்வாறு முறைகேடுகள் நடந்தால், அவற்றைக் கண்காணிக்கவும், பதிவு செய்யவும், இரு ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த கேமராக்களில் ஒன்று உற்சவ காலத்தில் பழுதடைந்து விட்டது. மற்றொன்றை செயல்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால், அங்கு நடந்த செயல்பாடுகள் கேமராவில் பதிவாகவில்லை. பக்தர்கள் அளித்த வெளிநாட்டு கரன்சிகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றை உடலில் ரகசிய பகுதிகளில் மறைத்து சிலர் கடத்தியுள்ளதாகத் தெரிகிறது.இவ்வாறு நடைபெறாமல் இருக்க, பல ஆண்டுகளுக்கு முன், பணத்தை எண்ணி முடித்து வெளியே வருபவர்களின் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டது. அது மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், அவ்வாறு செய்வது நிறுத்தப்பட்டது. இவ்வாறான முறைகேடுகளால், தேவசத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.