உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனம் திருந்திய மைந்தன்

மனம் திருந்திய மைந்தன்

ஒருமுறை நபிகள்நாயகத்திடம் இளைஞன் ஒருவன், ‘எனது பொருட்களை என் தந்தையார் உபயோகிப்பதை நான் விரும்பவில்லை. என் பணத்தையும் செலவு செய்வது பிடிக்கவில்லை. அவருக்கு அறிவுரை கூறுங்கள்” என்றான். உடனே நாயகம் இளைஞரின் தந்தையை அழைத்து வர ஆள் அனுப்பினார். சிறிது நேரத்தில் முதியவர் ஒருவர் ஊன்றுகோல் உதவியுடன் வந்தார்.

அவரிடம் இளைஞனின் எண்ணத்தை தெரிவித்தார். “அண்ணலே! என் மகன் பிறந்த போதும் சரி, பெரியவனாக வளர்ந்த போதும் சரி, அவன் ஒன்றும் தெரியாதவனாகவும், ஏதுமில்லாதவனாகவும் இருந்தான். அப்போது நான் வலிமையுடன் செல்வந்தனாக இருந்தேன். என் வாழ்நாள் முழுவதையும் அவனுக்காக அர்ப்பணித்தேன்.

கொஞ்சம் கூட கணக்கு பார்த்ததில்லை.‘ எனக் கண் கலங்கினார். தொடர்ந்து ‘இப்போது வயதாகி விட்டதால் வீட்டில் முடங்கி விட்டேன். அவனோ வலிமை மிக்கவனாக, ஆரோக்கியமான வனாக, செல்வந்தனாக இருக்கிறான், எனக்காக பணம் செலவழிக்க விரும்பவில்லை.  எந்த பொருளையும் நான் உபயோகிக்கக் கூடாது என்பதற்காக ஒளித்து வைக்கிறான்‘ என தன் ஆதங்கத்தை தெரிவித்தார் அவர். கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார் நாயகம்.“தோழரே! நீயும், உனது செல்வமும் உன் தந்தைக்குரிய உடமைகள் என்பதை மறவாதே. பெற்றோர் அநியாயம் செய்தாலும் பிள்ளைகள் அன்பு செலுத்துவது கட்டாய கடமை. இதில் உன் தந்தை உனக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துள்ளார்.

இப்போது அவரிடம் கணக்கு பார்க்கிறாய். பெற்றோருக்கு உபகாரம் செய். நிச்சயம் நரகம் செல்ல மாட்டாய்.‘ என புத்திமதி கூறினார்.இதைக் கேட்ட பின்பு, தந்தையை தன்னுடன் அழைத்துச் சென்றான் இளைஞன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !