விஸ்வரூப கோதண்டராமர் சிலை செல்வதில் சிக்கல்
செஞ்சி: விஸ்வரூப கோதண்டராமர் சிலையை, குறுகலாக உள்ள கோட்டை மதில் வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை இருப்பதால், மாற்று வழியில் கொண்டு செல்வது குறித்து, ஆய்வு நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே, ஈஜிபுரத்தில் பிரதிஷ்டை செய்ய, திருவண்ணாமலை மாவட்டம், அகரகொரகோட்டையில் இருந்து, 2.30 லட்சம் கிலோ எடையில், 64 அடி உயரத்தில், விஸ்வரூப கோதண்டராமர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, 240 சக்கரங்கள் பொருத்திய, 80 அடி நீளம் உள்ள, ‘கார்கோ’ லாரியில் கொண்டு செல்கின்றனர். கடந்த வாரம் புறப்பட்ட சிலை, நேற்று முன்தினம் இரவு, செஞ்சியை அடைந்தது.
செஞ்சியில், சங்கராபரணி ஆற்று பாலம், இந்த எடையை தாங்கும் வகையில் இல்லை என்பதால், மேல்களவாய் ரோடு தரைப் பாலம் வழியாக, செஞ்சியை கடந்து செல்ல முடிவு செய்திருந்தனர். இதற்கு இடையூறான மின் கம்பங்களை அகற்றவும், ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகர பகுதியை கடந்து, செஞ்சி கோட்டை வழியாக சிலை செல்ல வேண்டும். இதில் ராஜகிரியையும், கிருஷ்ணகிரி கோட்டையையும் இணைக்கும் மதில் பகுதியில், அகலம், 26 அடியாக உள்ளது. சிலை உள்ள லாரி செல்ல, 28 அடி அகலம் தேவை. எனவே, இந்த வழியில் சிலையை கொண்டு செல்ல, இந்திய தொல்லியல் துறையினர் ஆட்சேபனை தெரிவித்து, நேற்று, செஞ்சி, டி.எஸ்.பி.,யிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, சிலையை மாற்று வழிகளில் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகளை, சிலை கொண்டு செல்லும் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், சிலை செஞ்சியில் இருந்து கிளம்ப, மேலும் சில நாட்கள் ஆகும் நிலை என தெரிகிறது.