திருத்தணி கோவிலில் நவீன முடி காணிக்கை மண்டபம்
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், பக்தர்கள் வசதிக்காக, நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிப்பர். சில பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தலை முடி காணிக்கை செலுத்துகின்றனர். முடி காணிக்கை செலுத்துவதற்கு, மலைக்கோவிலில் நிரந்தர கட்டடம் இல்லை. தற்போது, மாடவீதியில் இலவச கழிப்பறை கட்டடம் அருகில், குறுகிய இடத்தில் முடி காணிக்கை செலுத்தும் இடம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக, நவீன முடி காணிக்கை மண்டபம் ஏற்படுத்துவதற்கு கோவில் பொது நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அருகே, நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி, அக்டோபர் மாதம் துவங்கி, தற்போது, துரித வேகத்தில் நடந்து வருகிறது.இது குறித்து, கோவில் அதிகாரி கூறியதாவது:பக்தர்கள் நலன் கருதி முடி காணிக்கை செலுத்துவதற்கு, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கட்டடத்தில், முடி காணிக்கை செலுத்தும் அறை, கழிப்பறை, குளியல் அறை மற்றும் ஆடைகள் மாற்றும் இடம் என, தனித்தனியாக பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட உள்ளது.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள், கட்டடப் பணிகள் நிறைவடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.