உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஸ்வரூப கோதண்டராமர் சிலை அகலத்தை குறைக்க பரிசீலனை

விஸ்வரூப கோதண்டராமர் சிலை அகலத்தை குறைக்க பரிசீலனை

செஞ்சி, விஸ்வரூப கோதண்டராமர் சிலையை, செஞ்சிக் கோட்டை வழியாக கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவுவதால், சிலையில் உள்ள தேவையற்ற பகுதிகளை அகற்றி, அதன் அகலத்தை குறைக்க, சிலை அமைப்புக் குழு பரிசீலித்து வருகிறது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள ஈஜிபுரத்தில், 108 அடி உயரத்தில், 11 தலைகளுடன் விஸ்வரூப கோதண்ட ராமர் சிலையை, பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சிலையை, கோதண்ட ராமர், ஆதிசேஷன், பீடம் என, மூன்று பிரிவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.தற்போது, 64 அடி நீளமும், 27 அடி அகலமும் கொண்ட, 3 லட்சம் கிலோ எடையிலான கோதண்ட ராமர் சிலையை, 240 சக்கரங்கள் பொருத்திய லாரியில், எடுத்து செல்கின்றனர்.சிலையை எடுத்து செல்வதற்காக, பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் சதானந்தம் என்பவர் தலைமையில், மூன்று இன்ஜினியர்கள், மூன்று டிரைவர்கள், மற்றும், 20 தொழிலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், லாரியுடன், தனித்தனி வாகனங்களில், உடன் பயணிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், அகரகொரகொட்டையில், கடந்த வாரம் புறப்பட்ட சிலை, 18ம் தேதி இரவு, செஞ்சி வந்தது. செஞ்சி சங்கராபரணி ஆற்று பாலம், இதன் எடையை தாங்கும் வலுவில் இல்லை என்பதால், அடுத்துள்ள மேல்களவாய் ரோடு, தரைப் பாலம் வழியாக, கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.இந்த வழியில், இடையூறாக இருந்த மின் கம்பங்கள், வீடு ஒன்றை, நேற்று குழுவினர் அகற்றினர். செஞ்சி கோட்டை வழியாக, சிலை செல்லும் வழியில், செல்லியம்மன் கோவில் அருகில் ராஜகிரியையும், கிருஷ்ணகிரி கோட்டையையும் இணைக்கும் கோட்டை மதில் பகுதி, 24.5 அடி அகலத்தில் உள்ளது.சிலை செல்வதற்கு மேலும், 4 அடி அகலம் தேவை.

இந்த இடம், பாரம்பரிய நினைவு சின்னங்கள் சட்டத்தின் கீழ், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மதில் சுவரை அகற்றி அகலப்படுத்த, இந்திய தொல்லியல் துறையினர், தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இதற்கு கால தாமதம் ஏற்படும் என்பதால், சிலையில் உள்ள தேவையற்ற பகுதிகளை வெட்டி, அகலத்தை குறைப்பதற்கான சாத்தியக் கூறுகளை, குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் எடுக்கப்படும் இறுதி முடிவை பொருத்தே, சிலை புறப்படும் நாள் முடிவாகும்.குவியும்பக்தர்கள்செஞ்சி வந்துள்ள விஸ்வரூப கோதண்ட ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள லாரி, சேத்துப்பட்டு சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை காண பக்தர்கள் குவிந்து வருவதால், ஏராளமான தற்காலிக கடைகள் உருவாகி, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !