உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யாருக்காக? இது யாருக்காக?

யாருக்காக? இது யாருக்காக?

சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட காந்திஜியை பெரிதும் மதித்தார் காஞ்சிப்பெரியவர். இந்தியக் கலாசாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும், அதற்காக ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற வேண்டும் எனவும் விரும்பினார். ஆனால் சுதந்திரம் அடைந்தபின் கட்சிசார்பற்றவராக செயல்பட்டார் காஞ்சிப்பெரியவர். குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தியதில்லை.  அரசியல் களத்தில் எதிரெதிராக நின்ற கட்சியினர் கூட பெரியவரின் அருளுரை கேட்பதில் ஒற்றுமையுடன் இருந்தனர்.  தனிமனித, சமுதாய ஒழுக்கத்தை சரிவர பின்பற்றுவதே பெரியவரின் கோட்பாடாக இருந்தது. இந்த மகத்தான பணியை தம் வாழ்நாள் முழுவதும் அலுப்பின்றிச் செய்தார். கண்ணுக்குத் தெரியும் ஸ்தூல உடல் மறைந்தாலும், சூட்சும வடிவாக வாழும் அவரது சிந்தனைகள் இன்றும் நம்மை நல்வழிப்படுத்துகின்றன. அவரை பின்பற்றினால் மனதில் அமைதி, நிம்மதி  பரவுவதை உணர முடியும்.   

அரசு செயல்படுத்தும் திட்டங்களில் பெரியவருக்கு மிகுந்த அக்கறை உண்டு. ஏழைகளின் நலன் கருதி அரசு இயங்க  வேண்டும் என சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வற்புறுத்தினார். அரசின் சலுகைகளைத் தவறுதலாகப் பயன்படுத்து வோரைக் கண்டித்தார். திட்டங்கள் யாருக்குச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்ந்தால் மட்டுமே நாடு முன்னேறும் எனத் தெரிவித்தார். ஒருமுறை மூதாட்டி ஒருவர், ஆதரவற்றோருக்கு அரசு தரும் முதியோர் உதவித்தொகையை பெற வழிகாட்டுமாறு பெரியவரின் உதவியை நாடினாள்.  அவரது குடும்ப பின்னணியை அறிந்த பெரியவர், “ யாருக்காக அரசு செய்யறது?  சாப்பாடு, துணிமணி எல்லாம் உன்னைப் பொறுத்தவரை சரிவர கிடைக்குது. குடியிருக்க நல்ல வீடும் இருக்கு. இதெல்லாம் இல்லாத ஏழைக்குத் தான் அரசு உதவித்தொகை தருது.  வயதானவர்களுக்கு எல்லாம் உதவித்தொகை உண்டு என்றால் நான் கூட விண்ணப்பிக்கலாம் இல்லையா? யோசனை பண்ணு. பாவத்தில் எல்லாம் பெரும்பாவம் அடுத்தவர்களுக்குக் கிடைக்கும் உதவியை மற்றவர் பிடுங்கிறது தான். அதை நீ பண்ண வேண்டாமே?” என்றார்.  மூதாட்டியும் உதவித்தொகை பெற விரும்பவில்லை எனத் தெரிவித்தாள்.   திருப்பூர் கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !