உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் அகவல் பிறந்த கதை

விநாயகர் அகவல் பிறந்த கதை

ஒருமுறை சிவனார் அளித்த யானையின் மீதேறி சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரோடு அவர் நண்பரான சேரமான் பெருமான் நாயனார் குதிரையில் அமர்ந்தும் திருக்கயிலை பயணத்தைத் தொடங்கினார்கள். செல்லும் வழியில் திருக்கோவலூர் என்னும் ஊரில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் கணபதியை உள்ளம் உருகப் பூஜித்துக் கொண்டிருந்தார் ஔவையார். அவரிடம், தங்களது திருக்கயிலை பயணத்தைப் பற்றி விவரித்தார்கள் சுந்தரரும் அவரின் நண்பரும். ஔவையாருக்கும் திருக்கயிலைக்குச் செல்லும் ஆவல் எழுந்தது. எனினும் ஆனைமுகனுக்கான பூஜையைப் பாதியில் நிறுத்த அவருக்கு மனமில்லை. ஆகவே, சிரத்தையுடன் பூஜையைத் தொடர்ந்து நிறைவேற்றி முடித்தார்.

அதுமட்டுமா? கயிலைக்கு செல்ல வேண்டும் என்ற தமது விருப்பத்தை பிரார்த்தனையாக்கி, மனதார சங்கல்பித்துக் கொண்டவர், பிள்ளையாருக்குத் துதிப்பாடல் ஒன்றையும் சமர்ப்பித்தார். அதுவே விநாயகர் அகவல், சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசைப்பாட... எனத் தொடங்கி அந்தப் பாடலை அவர் பாடி முடித்ததும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆம்! ஔவையின் பூஜையாலும் பாடலாலும் மிகவும் மகிழ்ந்த பிள்ளையார் பெருமான், தன் துதிக்கையால் அவரைத் தூக்கி, சடுதியில் கொண்டு போய் கயிலையில சேர்த்தார். அதன் பிறகே சுந்தரரும் அவரின் நண்பரும் கயிலைக்கு வந்து சேர்ந்தார்கள் தங்களுக்கு முன்னதாக ஔவையார் வந்திருப்பதைக் கண்டு திகைத்தவர்கள். இது எப்படி சாத்தியம்? என்று பெரும் வியப்போடு வினவினார்கள். அதற்கு ஔவையார். மதுரமொழி நல்உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை முதிர நினைய வல்லார்க்கரிதோ முகில் போன் முழங்கி அதிரநடந்தும் யானையும் தேரும் அதன் பின்வருங்குதிரையுங் காதங் கிழவியும் காதங்குல மன்னரே! - என்று பதில் சொன்னாராம். அதாவது மதுரமான மொழியை உடைய உமையம்மையின் புதல்வனான விநாயகரைத் துதித்து வந்ததால், அவரருளாலேயே யானைக்கும், குதிரைக்கும் முன்பாகவே என்னால் கயிலையை வந்தடைய முடிந்தது என்று கூறினார். இதுவே விநாயகர் அகவல் மலர்ந்தவிதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !