தளி அருகே சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் குங்கிலியம் பூக்கள்!
ஓசூர்:தளி அருகே தேர்பெட்டா மலைப்பகுதியில் சிவராத்தியையொட்டி மட்டுமே பூக்கும், குங்கிலியம் மர பூக்கள் தற்போது அப்பகுதி பூத்து குலுங்குவது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், "லிட்டில் இங்கிலாந்து என அழைக்கப்படும் தளி அருகே கடல் மட்டத்தில் இருந்து, 1,000 மீட்டர் உயரத்தில் தேவர்பெட்டா மலைப் பகுதி உள்ளது.இந்த மலை உச்சியில் முழுக்க, முழுக்க பசுமையான வனப்பகுதிகளை கொண்ட ரம்மியமான மலைப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில் காடுகளுக்கு நடுவில் ஓடும் சின்ன சிறு ஆறுகள், மலைகளுக்கு நடுவில் வழிந்தோடும் அருவிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.தேவர்பெட்டா மலைப்பகுதியில் அபூர்வமாக சிவராத்தியையொட்டி மட்டுமே பூக்கும் குங்கிலியம் பூ மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. இந்த மரங்கள் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.
குங்கிலிய பூக்கள், சிவனுக்கு மிகவும் பிடித்த பூஜை பூவாக ஹிந்துகளால் கருதப்படுகிறது. அதனால், சிவனுக்கு உகந்த இந்த குங்கிலியம் மர பூக்கள், சிவன் பண்டிகைகளில் முக்கியமான சிவராத்திரி வரும் மாதத்தில் மட்டுமே பூத்து குலுங்குவது விஷேசம். நேற்று சிவராத்திரியையொட்டி, தேவர்பெட்டா மலைப்பகுதியில் காணப்படும் இந்த குங்கிலியம் மர பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் கொத்து, கொத்தாக பூத்து குலுங்குவதோடு, நல்ல நறுமணமும் வீசுவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த மர கட்டைகளும், பூக்களும், நறுமண பொருட்கள், பல்வேறு மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது. சிவனுக்கு உகந்த மரமாக இந்த குங்கிலியம் மரங்கள் கருதப்படுவதால், மலைவாழ் மக்கள் உட்பட யாரும் இந்த மரங்களை வெட்டுவதில்லை.