இல்லறத்துக்கு பொறுமை அவசியம்
ஒரு சமயம் கலீபா உமரிடம் தன் குடும்பச்சண்டை பற்றி கூறி விளக்கம் பெற வந்தார் ஒருவர். அந்நேரத்தில், உமர் தன் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அதனால் அவர் மனமின்றி விஷயத்தைக் கூறினார். உமர், “எனக்கும் நரகத்திற்கும் இடையில் தடையாக இருக்கிறாள் என் மனைவி. எனது ஆடைகளைத் துவைக்கும் வேலைக்காரியாக இருக்கிறாள். பிள்ளைகளை ஆதரிக்கும் தாயாக இருக்கிறாள். எனக்குரிய பொருள்களை நான் வெளியே சென்றிருக்கும் போது பாதுகாப்பவளாக இருக்கிறாள். எனவே, அவள் கோபப்படும் போது நான் அவளை மன்னித்து விடுகிறேன். பொறுமை காக்கிறேன்,” என்றார். அதைக் கேட்டதும் அந்த மனிதர், “நானும் என் மனைவியை மன்னித்து விட்டேன்” என்று கூறி விட்டுப் புறப்பட்டார். ஒருமுறை தோழர் ஒருவர், “அண்ணலாரே! எனது மனைவியின் நாக்கு நீளமாயிருக்கிறது. பக்கத்து வீட்டாருடன் அடிக்கடி சண்டை போடுகிறாள்,” என நபிகள் நாயகத்திடம் தெரிவித்தார். தோழரின் உள்ளத்தைச் சோதிப்பதற்காக, “அப்படியானால் உமது மனைவியை தலாக் (விவாகரத்து) சொல்லிவிடும்,” என்றார். உடனே தோழர்,“எனக்கு குழந்தைகளைப் பெற்றுத் தருகிறாள். வாழ்க்கையில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறாள்,” என்று கூறியபோது, “அப்படியானால், அவளுக்கு நல்ல புத்திமதிகளைக் கூறும். இந்த நற்செயலை விட்டுவிட்டு மனைவியை அடிப்பது கூடாது,’ என்றார்.