அஹோபில க்ஷேத்திரம்
ஸ்ரீமஹாவிஷ்ணு அவதாரங்களில் தனித்துவம் நிறைந்த அவதாரம், நரசிம்ம வதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் மனித சரீரம், தலை மட்டும் சிம்மத்தின் தலை, இவ்வவதாரத்தில் அற்புதமும், அழகும் கலந்த நிலையினைக் காணலாம். மனிதர்களை விலங்கினங்களில் இருந்து வேறுபடுத்துவது அறிவாற்றல் குறைந்த பகுத்தறிவுத் தன்மையேயாகும். இந்தறிவாற்றலும் தன்னலமற்ற சிந்தனையும் உடல்வாகும் துணை நின்றால் வெற்றி நிச்சயமாகும். இதுவே நரசிம்மவதாரத்தின் வெளிப்பாடு ஆகும். ஞானம் நிறைந்திருந்து உடல்வாகு இல்லையெனில் பலவீனமானவனாவான். பலம் இருந்தும் ஞானம் இல்லையெனில் ராக்ஷசனாவான். ஞான சக்தியின் வழி தர்மத்தைக் காத்தும், உடல்வாகுவின் வழி அதர்ம வாதிகளை அழிக்கும் வகையில் ஸ்ரீவிஷ்ணு அவதரித்த அவதாரமே நர சிம்மாவதாரம் என்றுச் சொல்லலாம். இந்த அவதாரம் கோபத்தோடும், ஆவேசத்தோடும் இருப்பதற்கு பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் முக்கிய காரணமாக அமையும்.
வைணவ திவ்விய தேசங்களில் மஹாலக்ஷ்மி சமே நரசிம்ம சுவாமி தோற்றம் நலன் பயக்கும். லக்ஷ்மி நரசிம்மனை தியானித்து வேண்டுவதால் அனைத்துத் துன்பங்களும் நீங்கி மிக விரைவில் அனைத்து நலன்களும் ஏற்படும். பிரம்மதேவன் இரண்யனுக்கு கொடுத்த வரங்களை நிறைவேற்றுவதற்கு மகாவிஷ்ணு கலைக்கூடத்திலுள்ள தூணிலிருந்து நரமிருக சரீரத்தோடு தோன்றினார். பிரம்மா கொடுத்த வரத்தினால் மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனைக் கொன்று பிரகலாதனைக் காக்கின்றார்.
ஸ்ரீஹரி நரசிம்மனாக அவதரித்த திவ்வியத் தலமே அஹோ பிலமாகும். அஹோபிலத்தில் சுயம்பு மூர்த்தியாக கருடாத்ரி, வேதாத்ரி மலைத்தொடரில் ஒன்பது (9) உருவங்களைத் தாங்கி எம்பெருமான் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றான். இச்சிறப்பு மிக்க தலத்தை நவநரசிம்ம க்ஷேத்ரம் என்று பக்தர்கள் அழைக்கின்றார்கள்.
மலை உருவில் குடிகொண்டிருக்கும் ஆதிசேஷனின் சிரசின் பகுதியானது வேங்கடசால க்ஷேத்ரம் என்றும், மையப்பகுதி அஹோபிலம் என்றும், வால் பகுதி ஸ்ரீசைல க்ஷேத்ரம் என்றும் பவிஷ்யோத்தர புராணம் (2-45) எடுத்தியம்புகின்றது. அஹோபில க்ஷேத்ரம் இராயலசீமாவின் முகத்துவாரமாகவும், பக்தி க்ஷேத்திரங்களின் எல்லையாக இருக்கும் கர்னூல் மாவட்டத்தில் கர்னூலிலிருந்து கடப்பா செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. அஹோபிலம் பற்றிய பதிவுகள் பிரம்மாண்டாதி புராணங்களில் நிறைவாகக் காணப்படுகின்றன. எம்பெருமான் இத்தலத்தில் குகைக்குள் காட்சியளிப்பதால் இத்தலத்திற்கு “அஹோபலம், அஹோபலம்” எனப் பெயர் வந்ததது. ஆழ்வார் பாடல்களில் இத்தலம் “சிங்கவேள் குன்னம்” என்றும் “சிங்கவேள் குன்றம்” என்றும் குறிக்கப்படுகின்றது. இது 108 வைண திவ்விய தேசங்களில் ஒன்றாகும். ஆனால், கி.பி. 1124 ஆம் ஆண்டிற்கு உட்பட்ட ஓர் கல்வெட்டு மட்டும் இந்த க்ஷேத்திரத்தை “அஹோபிலம்” என்று கூறுகின்றது. இரணியனை வதைத்துப் பின்னர் கோப ரூபத்தோடு நரசிம்மர் வேதாச்சலம், கருடாச்சலம் இடையிலுள்ள பவநாசி தீர்த்தம் அருகிலுள்ள குகைக்குள் தேவர்கள் அனைவருக்கும் காட்சிக் கொடுத்தார். அப்பொழுது தேவர்கள் அனைவரும் “அஹோவீரம் அஹோசூரம், அஹோ பாஹு பராக்ரமம் நரசிம்மம் பரம் தெய்வம் அஹோபலம் அஹோ பிலம் ” என்று போற்றினார்கள். எனவே, இந்த க்ஷேத்திரம் அஹோபலம் என்றும், அஹோபிலம் என்றும் பெயர் பெற்றது என்பார்.
இனி, அஹோபில கிராமத்தின் தொன்மையை நோக்கின் முன்னொரு காலத்தில் இக்கிராமத்தில் குடி கொண்டுள்ள உக்ர நரசிம்ம சுவாமியை பிரன்னம் செய்து கொள்வதற்கு கருடன் நல்லமலை பகுதியிலுள்ள ஸ்ரீசைலத்திற்கு 96 மைல் தொலைவில் கடும்தவம் புரிந்தார். அவனதுத் தவத்தை ஏற்ற எம்பெருமான் அவ்விடத்திற்கு வட கிழக்கு திசையில் 25 மைல் தொலைவில் பவநாசி நதி தீரத்தில் ஒரு மலைக் குகையில் காட்சி கொடுப்பேன் என்றும், அங்கு வரவும் எனக் கட்டளையிட்டார். அந்த மலைக்குகையில் ஜ்வாலை நரசிம்ம மூர்த்தியை கருடன் தரிசித்து “அஹோபிலம்”, “அஹோபலம்” என்றார். உனது தரிசன பாக்கியத்தினால் நான் பலம் பொருந்தியவனாக மாறினேன் என்பதற்காகவே நான் அப்படியாக சொன்னேன் என்றார். எனவே, அஹோபலேசனை தரிசித்தால் மஹாபலத்தை பெறலாம் என்பது அதன் பொருள்.
அஹோபில க்ஷேத்திரத்தில் இரண்டு இடங்களில் இரண்டு வடிவங்களில் நரசிம்ம சுவாமியை தரிசிக்கலாம்.
1. மஹாலக்ஷ்மி சமேத நரசிம்ம சுவாமி குடியிருக்கும் இடம் கீழ் அஹோபிலம். இந்த சுவாமியை பிரஹல்லாத வரத நரசிம்ம சுவாமி என்பர்.
2. நவநரசிம்மர்கள், செஞ்சு லக்ஷ்மி தேவி குடியிருப்பது உக்ர நரசிம்ம க்ஷேத்திரம், இந்த க்ஷேத்திரத்தை மேல் அஹோபிலம் என்பர்.
மேல் அஹோபிலத்திற்குச் செல்லும் வழியில் கீழ் அஹோபில பிரஹல்லாத வரத நரசிம்ம சுவாமி கோயில் தென்படும். இந்த கோயில் உயர்ந்த ராஜ கோபுரமும், துவஜஸ்தம்பமும், 10 வரிசையில் 82 தூண்களைத் தாங்கிய மண்டபத்தில் புராண இதிகாச கதைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள் தோற்றப்பொலிவோடு காட்சிக் கொடுக்கும்.
இந்த மண்டபத்தை தாண்டி முன்னுக்குச் சென்றால் உட்கோயில். இக்கோயில் வாசல் இருபுறமும் ஜெய விஜய விக்ர ஹங்களும், துவாரபந்தத்தின் மேல் கஜலக்ஷ்மியும் தோற்றமளிப்பார். இதற்கு அடுத்து அர்த்த மண்டபம், அதனை ஒட்டியே இருக்கும் கர்பாலயம், கர்பாலயத்திற்கு மத்திய பாகத்தில் இரண்டடிக்குப் பின்புற வழிக்கு எதிரே பிரஹல்லாத வரத சுவாமி மஹாலக்ஷ்மி தேவியை தொடை மீது அமர வைத்திருக்கும் காட்சி நமக்கு அருளைக் கொடுக்கும். இந்த சுவாமி வரத ஹஸ்தத்தோடு சங்கு சக்கரங்களைத் தாங்கி இருப்பது சிறப்பாகும்.
பிரம்மாண்ட புராணங்களில் சொன்னபடி கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான திருவேங்கடமுடையான் பத்மாவதி தாயாரை திருமணம் புரிந்து கீழ் அஹோபிலத்திற்கு சென்று அங்கு லக்ஷ்மி நரசிம்ம சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது செய்தியாக சொல்லப்படுகின்றது. இதற்கு ஏற்ப அஹோபில நரசிம்ம சுவாமி கோயில் பிரகாரத்திற்குள்ளேயே கல்யாண வேங்கடேச பெருமாள் கோயில் அமைந்திருப்பது ஏற்றமாகும். பிரஹல்லாத வரத சுவாமி கோயில் பக்கத்திலேயே நரசிம்ம சுவாமியின் பட்டத்து அரசியான அமுதவல்லித் தாயார் மஹாலக்ஷ்மி தாயாராக எழுந்தருளியுள்ளார்.
லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் பற்றிய கதை ஒன்று வழக்கத்தில் உள்ளது. காகதீய அரசியான ருத்ரமாதேவியின் பேரன் பிரதாப ருத்ர மஹாராஜா என்பவர் மலை மீது குகையில் காட்சி தரும் உக்ர நரசிம்ம சுவாமியை பல முறை தரிசனம் செய்து கொண்டார். மலைமீதுள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமியை மக்கள் எளிய முறையில் தரிசனம் செய்யும் பொருட்டு புராண கால சுவாமியின் விக்ரஹத்தை கண்டறிந்து மலை அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்தார். மக்கள் இன்றும் இப்பெருமாளை வழிபட்டு வருவது கண்கூடாக காணலாம். இக்கோயிலில் வைணவ சம்பிரதாயத்தின்படி வைணவ வழிகாட்டுதலின்படி வழிபாடுகள் நடந்து வருவது சிறப்பாகும்.
அஹோபில க்ஷேத்திரத்திற்கு அஹோபில பாரம்பரியத்தின் கீழ் இயங்கும் மடம் ஒன்று இருக்கின்றது. இதை எம்பெருமானே ஏற்படுத்தினார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த மடத்தின் முதல் ஜீயராக ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆதிவன் சடகோப யந்தீந்திர மஹாதேசிகன் சுவாமி ஆவார். இவரது இயற்பெயர் “கிடாம்பி ஸ்ரீநிவாசாச்சார்யர்” காஞ்சிபுரத்தில் வேதத்தை அத்யயனம் செய்து கொண்டு எப்பொழுதும் எம்பெருமானையே தியானித்துக் கொண்டு இருக்கும் இவருக்கு ஒரு நாள் எம்பெருமான் கனவில் கடாக்ஷித்தார். எம்பெருமானின் ஆணைக்கு இணங்க சடகோப ஜீயராக பொறுப்பேற்று கோயிலை நிர்வகித்து வந்தார்.
எம்பெருமான் லக்ஷ்மி நரசிம்மனாக சிறு விக்ரஹமாக மாறி சடகோப ஜீயர் திருக்கரங்களில் காட்சியளித்தார். ஆழ்வார் திருநகரி க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் திருநாமம் ஆதிநாத பெருமாள். இத்திருநாமத்திலுள்ள “ஆதி” என்கின்ற சொல்லையும் நம்மாழ்வாரின் சடகோபன் என்கிற திரு நாமத்தையும் சேர்த்து அஹோபில மடாதிபதிக்கு “ஆதிவன் சடகோப ஜீயர்” என்றும், “ஆதிவன் சடகோப யதீந்திர மஹாதேசிகன்” என்றும் பெயர் சூட்டினர். இப்பரம்பரைத் தொடர்ந்து வருவது இன்றும் நாம் காணலாம். தாள்ள பாக்க அன்னமாசாரியருக்கு வைணவ தீக்ஷை கொடுத்தது இந்த பரம்பரையைச் சார்ந்த ஜீயர் என்பது தனிச் சிறப்பாகும். இதனை அடுத்து தாள்ளபாக்க அன்னமாசாரியர் திருமலை ஸ்ரீநிவாசனையும், அஹோபில நரசிம்மனையும் போற்றி பல கீர்த்தனைகள் பாடினார்.