நவரநசிம்மர்களின் தரிசனம்
அஹோபிலத்தில் ஒன்பது வடிவங்களில் நவநரசிம்மர்கள் குடி கொண்டுள்ளனர். “ஜ்வாலா ஹோபில மாலோல வராஹ ச்சாபி காரஞ்ஜ: பார்கவ: பாவந சுவாமி யோகாநந்த சத்ர வட: நவைதே நாரசிம்ஹா ஸ்ய க்ஷேத்ராக் யாதி இதிஸ்ம்ருதி:” என்று பிரம்மாண்ட புராணத்தில் அஹோபிலத்திலுள்ள நவநரசிம்மர்கள் புகழ் போற்றப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு மூன்று கோயில்கள் தவிர மீதி கோயில்களுக்கு மலையில் நடந்துச் செல்லலாம். இவற்றை வரிசை முறையில் நோக்கின்....
பார்கவ நரசிம்மக்ஷேத்ரம்
கீழ் அஹோபிலத்திலிருந்து மேல் அஹோபிலத்திற்கு செல்லும் பாதையில் வடகிழக்கு திசையில் 2 கி.மீ. தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி சங்கு சக்கரங்கள் இரண்டு கைகளில் தரித்து, மற்ற இரண்டு கைகளால் தொடை மீதுள்ள இரண்யனை கிழிக்கும் காட்சியினை தரிசிக்கலாம்.
யோகாநந்த நரசிம்ம க்ஷேத்ரம்
இந்த க்ஷேத்ரம் கீழ் அஹோபிலத்திலிருந்து தென்கிழக்கு திசையில் ஆரண்ய பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி யோக நிலையில் இரண்டு கைகளையும் முழங்கால் மீது இட்டு, மற்ற இரண்டு கைகளில் சங்கு சக்கரங்களை தாங்கி தரிசனம் கொடுக்கின்றார்.
சத்ரவட நரசிம்ம க்ஷேத்ரம்
யோகாநந்த நரசிம்ம க்ஷேத்திரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்த க்ஷேத்திரம் அமைந்துள்ளது. இங்கு சுவாமி நான்கு கைகளோடு காட்சி கொடுக்கின்றார். இரண்டு கரங்களில் சங்கு சக்கரமும், மற்ற இரு கரங்களில் ஒரு கரத்தில் அபய முத்திரையோடும், மற்றொரு கரத்தில் சங்கீதத்தை கேட்டபடி தாளம் போடுவது போன்றும் காட்சி கொடுக்கின்றார்.
காரஞ்ஜ நரசிம்ம க்ஷேத்ரம்
இந்த கோயில் கீழ் அஹோபிலத்திலிருந்து மேல் அஹோபிலத்திற்கு செல்லும் மார்க்கத்தில் 7 கி.மீ. தொலைவில் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் சுவாமி வலது கையில் சுதர்சன சக்கரத்தோடும், இடது கையில் சங்குக்கு பதிலாக தனுசுவையும் தாங்கி இருக்கின்றார். மற்ற இரண்டு கரங்களின் தோற்றம் தியான முத்திரையோடும் தரிசனம் அளிக்கிறார்.