உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நள்ளிரவில் நடராஜஜோதி தரிசனம்!

நள்ளிரவில் நடராஜஜோதி தரிசனம்!

சிதம்பரம் திருத்தலத்தில் உள்ள மரகத நடராஜர், மாணிக்க நடராஜர் என மக்களால் போற்றப்படும் ரத்ன சபாபதி வடிவம் உண்மையில் அரியவகை ரத்தினத்தால் ஆனது. இந்த ரத்ன சபாபதி தனிமம் விசித்திரம் வாய்ந்தது. இதற்கு முன்புறமாக தீபாராதனை காட்டும் போது முன்புறம் தீப ஒளிபடும் இடம் கருப்பாகவும், பின்புறம் ஜோதி மயமாகவும் காட்சி தரும். பின்புறம் தீபாராதனை செய்யும்போது முன்புறம் ஜோதிர்மயமாகக் காட்சி தரும். இந்த ரத்ன சபாபதி தரிசனக் காட்சி ஒவ்வொரு நாளிலும் மதிய வேளையில் மட்டுமே நடைபெறும். ஆனால், உத்ஸவ சமயத்தில், முறை தவறாமல் பூஜை செய்யும் தகைமையால், எட்டாம் திருநாள் அன்றைய பூஜையின் அர்த்த ஜாம பூஜை நடைபெற்ற பிறகு, மறு நாள் தேருக்கு நடராஜர் எழுந்தருள்வார் என்பதால், மறுநாளைக்கு உரிய பூஜைகள் முதல்நாள் (இந்த ஆண்டு 19.6.2018) இரவே நடந்தேறிவிடும்.

இரவு அர்த்தஜாம பூஜை முடிந்து, உடனடியாக மறுநாளுக்குரிய திருவனந்தல் எனும் பால் நிவேதன பூஜை, கால சந்தி பூஜை மற்றும் இரண்டாம் கால அபிஷேகங்கள் நடைபெறும். அந்த இரண்டாம் கால பூஜையில், ரத்ன சபாபதிக்கு நள்ளிரவில் பூஜைகள் நடக்கும். அந்த சமயத்தில் கனகசபையைச் சுற்றிலும் உள்ள செயற்கை விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இருள் சூழ்ந்த இடத்தில், ரத்ன சபாபதிக்கு மஹா தீபாராதனை நடைபெறும். அந்த சமயத்தில் தோன்றும் காட்சியே நள்ளிரவில் நடராஜ ஜோதி தரிசனம் எனும் காணுதற்கரிய தரிசனமாகும். ஆனித் திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா என ஆண்டில் இரு நாட்கள் மட்டுமே இப்படி நள்ளிரவில் நடராஜஜோதி தரிசனம் கிட்டும், இதனை கண்டவர் வாழ்வு பிரகாசிக்கும் என்பது நிச்சயம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !