உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவுடையார்பட்டி திருவிழா பிரச்னை:ஆறு ஆண்டுக்கு பின் இணைந்து விழா!

திருவுடையார்பட்டி திருவிழா பிரச்னை:ஆறு ஆண்டுக்கு பின் இணைந்து விழா!

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் திருவுடையார்பட்டியில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தது. வருவாய்த்துறையினர் சமாதானம் பேசிய பின் 6 ஆண்டுகளுக்குப் பின் கோயில் விழாக்களை இணைந்து நடத்த உள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் திருவுடையார்பட்டியில் இரு பிரிவினரிடையே திருவிழாக்களில் அம்பலப் பட்டத்திற்கான மரியாதை யார் பெறுவது என்ற வேறுபாடு இருந்தது. 2009 முதல் திருவிழாவை தனித் தனியாக நடத்தினர். 4 முறை இக்கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.வருவாய்த்துறையினர் பலமுறை சமாதான கூட்டம் நடத்தியும் எந்த ஒரு முடிவும் எட்ட முடியவில்லை. நேற்று முன் தினம் தேவகோட்டை ஆர்.டி.ஓ., தங்கவேலு தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இரு தரப்பினரும் பங்கேற்றனர். செங்கமடை கருப்பர் கோயில் விழா கொண்டாடவும், ஊர் அம்பலம் யார் என்பதில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்மேல் முறையீடு உள்ளதாலும் ஊர் அம்பலம் மரியாதையை தவிர்த்து, கிராமத்து மரியாதையை நான்கு பேருக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் வழங்க முடிவானது. விழாவில் மற்ற பிரிவினருக்கு வழக்கமான மரியாதை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் இறுதி உத்தரவு வரும் வரை மாட்டுப்பொங்கலன்றும் கிராமநிர்வாக அலுவலரே அம்பலம் தொடர்பான பணிகளை செய்யவும், பூட்டப்பட்ட கோயில்,பசுந்தொழுவை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் அம்பலம் தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் போது நடைமுறைப்படுத்தவும் அதுவரை அனைத்து தரப்பினரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !