மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பு!
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி, விதிமீறல் கட்டடங்கள் இருப்பது, மாநகராட்சி ஆய்வில் தெரியவந்தது.மீனாட்சி அம்மன் கோவிலின் 1 கி.மீ., சுற்றளவில், ஒன்பது மீட்டருக்கு குறைவான உயரத்தில் மட்டும் கட்டடம் கட்ட அனுமதிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன், இவ்விதி நடைமுறையில் இருந்தது. ஆனால், பலரும் அதை பின்பற்றாமல் கட்டடம் கட்டியதால், கோபுர தரிசனம் பாதிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடுவதும், அதன் பின் கண்டு கொள்ளாமல் போவதும், தொடர்ந்து வந்தது. கலெக்டர் சகாயத்திற்கு வந்த புகாரை தொடர்ந்து, விதிமுறை மீறிய கட்டடங்கள் குறித்து, உள்ளூர் திட்டக் குழு அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அதன்படி, 750 கட்டடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். மாநகராட்சி சார்பில் கோவிலை சுற்றி, தனி "சர்வே எடுக்க, 12 பேர் கொண்ட, இரு குழு நியமிக்கப்பட்டது.கடந்த ஒரு மாதமாக நடந்த சர்வேயில், உள்ளூர் திட்டக் குழு கண்டறிந்ததை விட, கூடுதல் கட்டடங்கள் விதிமீறி கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு, ஓரிரு நாளில் நோட்டீஸ் அனுப்பிய பின், சித்திரை வீதியிலிருந்து நடவடிக்கையை தொடங்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.