நாளை எருமேலி பேட்டை துள்ளல்: 12-ல் திருவாபரணம் புறப்பாடு
சபரிமலை: சபரிமலையில் மகர விளக்குக்கு நான்கு நாட்கள் உள்ள நிலையில், எருமேலி பேட்டை துள்ளல் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது.சபரிமலையில் மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் நிற்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புல்மேட்டில் 1800 போலீசார் பாதுகாப்பளிக்க உள்ளனர். பி.எஸ்.என்.எல். தற்காலிக டவர் அமைக்கப்படுகிறது.சன்னிதானத்தில் அன்னதான மண்டபத்தின் மேல்பகுதி, பாண்டித் தாவளம், மாளிகைப்புறம், அரவணை கவுன்டர் பகுதி, தேவசம்போர்டு அலுவலகம் என ஒன்பது இடங்களில் ஜோதி தரிசனத்திற்கு வசதி செய்யப்படுகிறது.சன்னிதானத்தில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பம்பை ஹில்டாப்பில் ஜோதி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக நேற்று ஆய்வு நடைபெற்றது.பேட்டை துள்ளல்மகரவிளக்குக்கு முன்னோடியாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு பின்னர் இங்கு பேட்டைதுள்ளல் நடைபெறாது. நாளை பகல் 12:30க்கு மணி வாக்கில் அம்பலப்புழா பக்தர்களும், மாலை மூன்று மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளல் நடத்துவர். பின்னர் இவர்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை செல்வர்.திருவாபரணம்மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நாளை மறுநாள் பந்தளத்திலிருந்து புறப்படுகிறது.அன்று காலை முதல் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். மதியம் உச்சபூஜைக்கு பின்னர் பெட்டிகளில் வைக்கப்பட்டு தலைசுமையாக புறப்படும்.14-ம் தேதி மாலை 6:30 மணிக்கு திருவாபரணம் சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்ற சில நிமிட நேரங்களில் பொன்னம்பலமேட்டில் ஜோதி காட்சி தரும்.