உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்ப்புக்கு எதிராக போராடியவர்கள் திருவாபரண பவனியில் வர தடை பக்தர்கள் கொந்தளிப்பு

தீர்ப்புக்கு எதிராக போராடியவர்கள் திருவாபரண பவனியில் வர தடை பக்தர்கள் கொந்தளிப்பு

சபரிமலை: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராடியவர்கள் திருவாபரண பவனியில் பங்கேற்க முடியாது என பத்தணந்திட்டை எஸ்.பி. அறிவித்துள்ளதால் புதிய பிரச்னை உருவாகியுள்ளது. திருவாபரண பவனி நாளை பகல் பந்தளத்தில் இருந்து புறப்படுகிறது. இது குறித்து நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், பவனிக்கு கூடுதல் பாதுகாப்பளிக்கவும், அரண்மனை நிர்வாகம் பரிந்துரைப்பவர்களை பவனியில் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பத்தணந்திட்டை எஸ்.பி. நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடியவர்கள், சபரிமலை தொடர்பான போராட்ட வழக்குகளில் சிக்கியவர்கள் பவனியில் செல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சிக்கல்: திருவாபரண பவனி மூன்று பிரிவுகளாக செல்லும். முதலில் திருவாபரண பெட்டியும், அதனுடன் செல்பவர்களும், அடுத்து மன்னர் பிரதிநிதியும், அவருடன் செல்பவர்களும், மூன்றாவதாக பவனியை பின்தொடரும் பக்தர்களும் செல்வார்கள்.தீர்ப்புக்கு எதிராக நடைபெற்ற பல போராட்டங்களிலும் அரண்மனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெண் சுவருக்கு எதிராக நடைபெற்ற ஐயப்ப ஜோதியில் இந்த ஆண்டுக்கான மன்னர் பிரதிநிதி ராகவவர்மாவும் கலந்து கொண்டார். எஸ்.பி.யின் இந்த உத்தரவு மன்னர் குடும்பத்துக்கும் பொருந்துமா என தெளிவு படுத்தப்படவில்லை.மூன்றாவது பிரிவில் சபரிமலை வழக்கில் சிக்கிய எவரும் செல்லக்கூடாது என்பதே போலீசின் திட்டம். இந்த உத்தரவு புதிய சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !