உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிம்மதி நிலைக்கட்டும்

நிம்மதி நிலைக்கட்டும்

செல்வந்தர் ஒருவர் யாருக்காகவும் எதற்காகவும் ஒரு ரூபாய் கூட தர மனம் இல்லாதவர். தர்மம் என்ற சொல்லை மறந்தும் கூட நினைத்ததில்லை. நோயின் பிடியில் சிக்கிய அவர் ஒருநாள் காஞ்சிப்பெரியவரை தரிசிக்க வந்தார். “சுவாமி! ரத்தஅழுத்தம், சர்க்கரை வியாதி,  புற்று நோய் என வியாதிகளால் ரொம்ப அவஸ்தைப்படறேன். நோயில் இருந்து விடுபட நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும்” என்று சொல்லி வருந்தினார். உற்று நோக்கிய சுவாமிகள், “பரிகாரம் இருக்கு. ஆனா உன்னால் செய்ய முடியுமா என்பது தான் தெரியவில்லை. கொஞ்சம் கஷ்டமான பரிகாரம் அது!” என்றார். “நீங்கள் சொன்னால் எதுவும் செய்வேன். எனக்கு குணமானால் போதும்” “அப்படியா சரி. முன்ஜன்ம பாவத்தால் தான் வியாதிகள் வருகின்றன. அதிலிருந்து விடுபட ஏழைகளுக்கு உதவுவது ஒன்றே வழி. மரத்தில் பழம் பழுக்கிறது. என் மரத்தில் பழுத்ததால் ’நானே அதை சாப்பிடுவேன்’ என எந்த மரமும் சொல்வதில்லை. தன்னிடம் இருக்கும் தண்ணீரைக் கிணறு தானே குடிப்பதில்லை. மற்ற உயிர்களுக்காகத் தானே தாவரங்கள் பூக்கின்றன; காய்க்கின்றன; கனிகளைத் தருகின்றன. தன் கன்றுக்குட்டி குடித்தது போக, மீதிப்பாலை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகிறதே பசு. இப்படி தாவரம், மிருகத்திற்கு இருக்கிற நல்ல புத்தி நமக்கு வேண்டாமா?

உன்னிடம் பணம் இருக்கிறது. அதை தர்மம் செய்வதில் சந்தோஷப்பட வேண்டாமா? குளம் வெட்டலாம். கோயில் திருப்பணி செய்யலாம். அன்னதானம் செய்யலாம். கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவலாம். உன்னிடம் பணம் இருப்பதால் வியாதி தீர மருந்து வாங்குகிறாயே. எத்தனையோ ஏழைகள் வியாதியால் சிரமப்படுகிறார்கள்; ஆனால் மருந்து வாங்க அவர்களிடம் பணமில்லை. நீ அவர்களுக்கு உதவலாமே? சேமித்த பணத்தை உயிரை விடும் போது, யாரும் கொண்டு போக முடியுமா? மற்றவர்களுக்குஉதவினால் அந்தப் பணம் சரியான வழியில் செலவானதாக அர்த்தம். அப்போது மனதில் நிம்மதி நிலைத்திருக்கும். வியாதிகள் நீங்கி நலமுடன் வாழ்வாய் ” என்றார் சுவாமிகள். தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்வதாக உறுதியளித்தார் செல்வந்தர்.  
திருப்பூர் கிருஷ்ணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !