அங்காள பரமேஸ்வரி கோவில் நந்தா தீப குண்டம் திருவிழா
அவிநாசி : அவிநாசி, காந்திபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நந்தா தீப குண்டம் திருவிழா கடந்த வாரம் துவங்கியது. நேற்றிரவு 7.00 மணிக்கு குண்டம் திறக்கப்பட்டு பூ வளர்த்தல், கரும்பு வெட்டுதல் ஆகியன நடந்தது.நேற்று காலை 9.00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கினர். முன்னதாக, சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு அக்னி அபிஷேகம், மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள், வழிபாடுகள் ஆகியன நடந்தன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றிரவு வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தேர், நாளை கொடியிறக்கம், மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. வரும் 25ம் தேதி பேச்சியம்மன் அபிஷேக பூஜை, 26ம் தேதி மகா அபிஷேகத்துடன் 67வது குண்டம் திருவிழா நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சந்திரமோகன், அவிநாசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அறக்கட்டளையினர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தார் செய்து வருகின்றனர்.