உள்ளூர் செய்திகள்

ஆழமான ஜெபம்

ஆண்டவரை வணங்குவதை இரண்டாவது வேலையாக வைத்துக் கொண்டு, அருகிலுள்ளவர்கள் எப்படி உடுத்தியிருக்கிறார்கள், என்ன நகை அணிந்திருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று பார்ப்பதை முதல் வேலையாக வைத்துக் கொள்கின்றனர் சிலர். உண்மையில் வழிபாடு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இயேசுவை வணங்குவது குற்றம் என அறிவித்தது ஒரு அரசு. இதை மீறியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் ஜெபத்தில் ஈடுபட்டனர். 


சிறை குறுகியதாக இருந்ததால் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சிலர் படுத்தால் சிலர் அமர்ந்திருக்க வேண்டும். மலஜலம் கழிக்க தனியிடம் இல்லை. அறைக்குள் ஒரு ஓரத்தில் தான் எல்லாம்... ஒரு நிமிடம் கூட வெளியே திறந்து விட மாட்டார்கள். துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு இருந்தனர். ஒருமுறை அவர்கள் நற்கருணை எடுத்துக்கொள்ள விரும்பினர். அதற்காக சிறை அதிகாரிகள் கொடுத்த ரொட்டியை வைத்துக் கொண்டனர்.  அதை தரையில் வைத்தால் அசுத்தமாக இருக்குமே என்று எண்ணி, ஒருவரை தரையில் குப்புற படுக்க வைத்து அவரது முதுகில் வைத்தனர்.  அப்பம் (ரொட்டி) கிடைத்து விட்டது. திராட்சை ரசத்துக்கு எங்கே போவது?  கானாவில் நடந்த திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றவில்லையா? இவர்களும் தங்களிடமிருந்த சிறிதளவு தண்ணீரை அவரது முதுகில் வைத்து, “இதையும் திராட்சை ரசமாக மாற்றித் தாரும்” என ஜெபித்து விட்டு ஆராதனையை முடித்தனர்.  அறையில் இருந்த அசுத்தம், துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், ஜெபிப்பதே குறிக்கோள் என்றிருந்த இக்கைதிகள் போல, சுற்றி நடப்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஜெபம் ஆழமானதாக அமைய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !