உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராமங்களில் தொடரும் பாரம்பரிய ஒற்றுமை விழா

கிராமங்களில் தொடரும் பாரம்பரிய ஒற்றுமை விழா

உடுமலை: உடுமலை கிராமங்களில், தைப்பூசத்தை முன்னிட்டு, நிலாச்சோறு, கும்மியால் களை கட்டியது. கிராமங்களில், குழந்தைகள், பெண்கள் ஒன்றிணைந்து, தைப்பூசம் கொண்டாடுவது பாரம்பரிய முறையாக உள்ளது. தை பவுர்ணமிக்கு, ஒன்பது நாட்களுக்கு முன்பு, இந்நிகழ்வு துவங்கும்.தினமும் மாலை நேரத்தில், குழந்தைகள் தங்கள் வீடுகளிலிருந்து உணவு எடுத்து வந்து, பொது இடத்தில் கும்மியடித்து, நிலாச்சோறு மாற்றி, அனைத்து உணவுகளையும் ஒன்றாக இணைந்து நிலாச் சோறு உண்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.அதே போல், தைப்பூசத்தன்று, ஊர்வலமாக பெண்கள், குழந்தைகள் வீடுகளிலிருந்து உணவு, மாவிளக்கு, தானியங்கள், இனிப்புகள் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். கிராமத்தின் பொது இடத்தில் தைப்பூச தேர் வரைந்து, அனைவரும் ஒற்றுமையாக கூடி வழிபடுவதையும், இன்றளவும் கிராமங்களில் கொண்டாடி வருகின்றனர். கிராமங்களில் வேளாண் வளம், கால்நடை வளம் பெருகவும், இல்லங்களில் அனைத்து செல்வங்களும் பெருகவும், பாடலுடன் கும்மியடித்து ஒற்றுமையை எற்படுத்தும் வகையிலும், நிலவுக்கு நன்றி சொல்லும் விழாவாகவும், தை பவுர்ணமியன்று, இந்த விழா கொண்டாடப்படுகிறது. தளி கிராமத்தில் வீடுகளிலிருந்து, ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு கிராமத்திலுள்ள குழந்தைகள், பெண்கள் வந்து, வழிபட்டனர். தொடர்ந்து, பொது இடத்தில், தென்னை ஓலையில் பசும்பந்தல் அமைத்தனர். வாழை உள்ளிட்ட பழங்களால் தோரணம் கட்டினர். தைப்பூசத்தேர் வரைத்து, மாவிளக்கு, உணவு, தானியம், முளைப்பாலிகை, உலக்கை, தேங்காய், பழம் வைத்து, முருகனை வணங்கி தேரை சுற்றி வந்து கும்மியடித்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு நிலாச்சோறு வழங்கப்பட்டது. அதே போல், உடுமலையை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில், நிலாச்சோறு கும்மி என தைபூசத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !