ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தங்கைக்கு சீர்வரிசை
திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மனை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கையாக பாவித்து, பக்தர்கள் வழிபடுகின்றனர். இது தவிர, ஸ்ரீரங்கம் கோவிலின் சார்பு கோவிலாகவும் சமயபுரம் கோவில் இருந்ததால், ஆண்டுதோறும் தைப்பூச நாளில் கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி கண்டருள வரும் சமயபுரம் மாரியம்மனுக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, மாலைகள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படும்.
அதன்படி, நேற்று முன்தினம், சமயபுரம் கோவிலில் இருந்து, கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட சமயபுரம் மாரியம்மன், நொச்சியம் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் கரையில் எழுந்தருளினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் எழுந்தருளி, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளினார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர்கள், அதிகாரிகள், ஸ்தலத்தார்கள் பட்டுப்புடவை, மாலைகள், மஞ்சள், சந்தனம், வளையல் உள்ளிட்ட மங்களப் பொருட்களை வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ரெங்கநாதர் கோவில் வடக்கு வாசல் வழியாக, அலங்காரப் பந்தலுக்கு சென்றனர். அங்கு சமயபுரம் கோவில் இணை ஆணையர் குமாரதுரை மற்றும் கோவில் அலுவலர்களிடம், சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டாடைகள் மற்றும் மாலைகளை மாரியம்மனுக்கு அணிவித்து தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.