பெண்கள் மட்டும் வடம் பிடித்த தேரோட்டம்
தர்மபுரி: தைப்பூசத்தையொட்டி, தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று, பெண்கள் மட்டுமே, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தைப்பூசத்தையொட்டி, கடந்த, 15 மாலை, 5:00 மணிக்கு, சுவாமி நிலத்தில் புற்றுமண் எடுத்தல் நடந்தது. மறுநாள் காலை, 11:00 மணிக்கு, கொடியேற்றம், ஆட்டுக்கிடா வாகனத்தில் உற்சவர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, தினமும், புலி வாகனம், பூத வாகனம், நாக வாகன உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், விநாயகர் தேரோட்டம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, நேற்று காலை, 10:00 மணிக்கு, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து, தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அப்போது, ‘முருகனுக்கு அரோகரா’ என பக்தர்கள் கோஷங்கள் எழுப்ப, உற்சாகத்துடன் தேர்பவனி நடந்தது. நாளை, கொடியிறக்கம், பூப்பல்லக்கு உற்சவம், நாளை மறுநாள் சயன உற்சவம் நடக்கிறது.