உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியமாரியம்மன் கோவில் திருவிழா: பந்தல் முகூர்த்தக்கால் நடும் விழா!

பெரியமாரியம்மன் கோவில் திருவிழா: பந்தல் முகூர்த்தக்கால் நடும் விழா!

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் நடப்பாண்டு திருவிழாவிற்காக, பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன் பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோவில், அறநிலையத் துறைக்கு அதிக வருவாய் தரக்கூடியது. நடப்பாண்டு கோவில் குண்டம், தேர்த்திருவிழா, மார்ச் 20ம் தேதி துவங்கி, ஏப்ரல் 8ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவுக்காக கோவில் முன், பிரப் ரோட்டில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியம் முன்னிலையில், அறநிலையத் துறை உதவி ஆணையர் தனபால் கலந்துகொண்டு, நேற்று காலை 10 மணிக்கு, பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தகாலை நட்டார். மார்ச் 20ம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்குகிறது. மார்ச் 24ம் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகத்துடன் கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 28ம் தேதி கிராம சாந்தி, மார்ச் 29ம் தேதி கொடியேற்றம், ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா, மாவிளக்கு மற்றும் கரகம் எடுத்து வரப்படும். ஏப்ரல் 4ம் தேதி காலை பொங்கலும், மாலை தேர் வடம் பிடித்தல், ஏப்ரல் 5ம் தேதி மாலை பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலாவும், ஏப்ரல் 6ம் தேதி சின்ன மாரியம்மன் மற்றும் வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி வலம் நடக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி மதியம் 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏப்ரல் 8ம் தேதி காலை 10 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !