பணக்காரர் என்றில்லை... ஏழ்மையிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்கு நபிகள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். ஒருநாள் இரவில் பசியால் வாடும் ஒரு மனிதரைக் கண்டார் நபிகள். தன் வீட்டிற்கு ஆள் அனுப்பி உணவிருக்கிறதா எனக் கேட்டு வரச் சொன்னார். இல்லை என பதில் கிடைத்தது.
“இன்றிரவு இவருக்கு உணவளிப்பீர்களா?” என நபிகள் கேட்க, நண்பர்களில் ஒருவர் முன்வந்தார். வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்ற நண்பர், மனைவியிடம் உணவு தருமாறு வேண்டினார். “உணவு இருக்கிறது. அதை இவருக்கு கொடுத்தால் நம் குழந்தைகள் பட்டினி கிடப்பார்களே!” என்றார் மனைவி. “சரி... குழந்தைகளை சமாதானம் செய்து கொள்ளலாம். இவரோடு சேர்ந்து சாப்பிடுவது போல் நாம் நடிக்க தொடங்குவோம். அவர் சாப்பிட ஆரம்பித்ததும், நீ விளக்கை அணைத்து விடு” என்றார் மனைவியிடம். வந்தவருக்கு உணவு பரிமாறியதும் சாப்பிட ஆரம்பித்தார். நபிகளின் தோழரும், அவர் மனைவியும் இருளில் சாப்பிடுவது போல் நடித்தனர். குழந்தைகளும் பட்டினி கிடந்தனர். மனதில் இரக்கம் இருந்தால் பிறருக்கு உதவும் எண்ணம் வந்து விடும்.