2000 ஆண்டு பழமையான ‘கும்பமேளா’ குதுாகலம்!
ADDED :2449 days ago
உலகில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழா கும்பமேளா. இரண்டாயிரம் ஆண்டு பழமையானது. ‘மனித குலத்தின் கலாசார பாரம்பரிய நிகழ்வு’ என ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ் (கங்கை, யமுனை, சரஸ்வதி), உத்தரகண்ட்டில் ஹரித்துவார் (கங்கை), மத்தியபிரதேசத்தில் உஜ்ஜயினி (சிப்ரா), மகாராஷ்டிராவில் நாசிக் (கோதாவரி) ஆகிய நான்கு இடங்களில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கும்பமேளா நடக்கிறது. சாகாவரம் தரக்கூடிய அமிர்த பானத்தின் துளிகள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்து சென்ற கும்பத்தில் இருந்து இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக ஐதீகம். இங்கு நீராடுவதன் மூலம் பாவங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது.
மகா கும்பமேளா ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்துவார், பிரயாக்ராஜில்(பழைய பெயர் அலகாபாத்) நடப்பது ‘அர்த்த கும்பமேளா. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் நடப்பது ‘பூர்ண கும்பமேளா. இவ்வாறு 12 பூர்ண கும்பமேளா முடிந்த பின் (144 ஆண்டுகளுக்கு ஒருமுறை) பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடப்பது ‘மகா கும்பமேளா’. தற்போது பிரயாக்ராஜில் (ஜன., 15 – மார்ச் 4) ‘அர்த்த கும்பமேளா நடக்கிறது.
மருத்துவமனைகள்: மருத்துவ தேவைக்காக 14 தற்காலிக மருத்துவமனைகள், 243 டாக்டர்கள் உள்ளனர்.தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படை சார்பில், ஆபத்து காலங்களில் மக்களை காப்பாற்றும் விதமாக நீர் வழித்தடத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
4,200: உ.பி., அரசு கும்பமேளாவுக்காக ரூ. 4,200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
12: இதில் நாடு முழுவதிலும் இருந்து 12 கோடி பேர் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
40: பக்தர்களின் பாதுகாப்புக்காக 40,700 எல்.இ.டி., விளக்குகள், 1,000 சி.சி.டி.வி. ‘கேமரா’க்கள் பொருத்தப்பட்டுள்ளன.
5: ஐந்து லட்சம் கார்கள் நிறுத்துவதற்கான வசதி, 10 ஆயிரம் ‘டென்ட்கள் அமைக்கப்படடுள்ளன.
50: பக்தர்கள் பாதுகாப்பிற்காக 50 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டள்ளனர்.
22: நிரீல் மிதக்கும் 22 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.