உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஞ்சனுாரில் பழமையான தீர்த்தவாரி மண்டபம் கும்பாபிஷேகம்

கஞ்சனுாரில் பழமையான தீர்த்தவாரி மண்டபம் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கஞ்சனுாரில் 110 ஆண்டு பழைமையான தீர்த்தவாரி மண்டபம் மற்றும் வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கம்சபுரமாக போற்றப்படும் கஞ்சனுார் பாம்பு பஞ்சாங்கத்தின் பூர்விகமாகும். இவ்வூரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோவில் நவக்கிரக ஸ்தலங்களில் சுக்ர ஸ்தலமாக போற்றப்படுகிறது.

சைவத்தை  ஸ்தாபித்த ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்த இவ்வூரில் காவிரி ஆறு  கங்கைபோல் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்ந்து உத்திரவாகினியாக சிறப்பு பெறுகிறது. இத்தகையை சிறப்பு பெற்று காவிரி படித்துறையில் ஆண்டுதோறும் மாசிமக தீர்த்தவாரி நடைபெறும். தற்போது வடகாவிரி தீர்த்தவாரி படித்துறையில் மயிலாடுதுறை எம்.பி., பாரதிமோகன் மேம்பாட்டு நிதியில் ஆற்றில் புஷ்கரம் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்  படித்துறையின் கரை பகுதியில் பக்தரகளின் வசதிக்காக பெரிய அளவில் ஷெட் அமைத்து  சிமெண்ட் பிளாக்குகள் கொண்டு தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீர்த்தவாரிக்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவதற்காக கல்யாணபுரம் லட்சுமி அம்மாள் பொருளுதவியில் தீர்த்தவாரி மண்டபம் கடந்த 1908ம் ஆண்டு இரண்டு அடுக்குகளுடன்  கருங்கல்லால் கட்டப்பட்டது.  இதனை சீரமைக்க முடிவு செய்து அதிக பொருட்செலவில் 110 ஆண்டுகளுக்கு பிறகு பழமை மாறாமல்  சிற்ப வேலைப்பாடுகளுடன் திருப்பணி செய்யப்படடுள்ளது. வேப்பத்துார் பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர், பக்தர்கள் இதற்கான உதவிகளை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும், 8.45 மணிக்கு வரசித்தி விநாயகர் கோவில் மற்றும் தீர்த்தவாரி மண்டபம் மகா கும்பாபிஷேகம் மங்கள வாத்தியம் முழங்க நடந்தது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !