நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், அர்ச்சகர்கள் பாதுகாப்பாக பணியாற்ற நடவடிக்கை
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், அர்ச்சகர்கள் பாதுகாப்பாக பணியாற்ற, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என, அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு மாலை அணிவித்தபோது, தவறி கீழே விழுந்து, பட்டாச்சாரியார் வெங்கடேசன் உயிரிழந்தார். அமைச்சர் தங்கமணி, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உயிரிழந்த பட்டாச்சாரியாரின் குடும்பத்தின ருக்கு, முதல்வர் உத்தரவின்பேரில் ஆறுதல் தெரிவித்துள்ளோம்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், பாதுகாப்பாக அர்ச்சகர்கள் பணியாற்ற, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இறந்த பட்டாச்சாரியாரின் குடும்பத்தில் ஒருவருக்கு, வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மற்றும் நிவாரண உதவி குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, ஆஞ்சநேயர் கோவிலில், வரும் காலத்தில், இதுபோன்ற சம்பவங்களை ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, அமைச்சர் தங்கமணி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் ஆசியா மரியம், எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.