கன்னியாகுமரியில் கடல் திருப்பதி
நாட்டின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் கன்னியாகுமரி ஆன்மிக சிறப்பு வாய்ந்தது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் உட்பட பல்வேறு கோயில்கள் மாவட்டத்தின் சிறப்பாகும். கன்னியாகுமரி நகருக்கு ஆண்டுதோறும் 40 லட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகளும் புனித யாத்திரீகர்களும் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கன்னியாகுமரி பகவதி அம்மன் அம்மனை தரிசிக்கவும், முக்கடல் சங்கமத்தில் நீராடி புனிதம் பெறவும் விரும்பி வருகின்றனர். தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவில், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாரத மாதா ஆலயம், கன்னியாகுமரி அருகே பொத்தையடியில் கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோயில் ஆகியன கன்னியாகுமரியை முற்றிலும் ஆன்மிக பூமியாக்கி விட்டது.
திருப்பதி கோயில் : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில், விவேகானந்தா கேந்திராவின் கடற்கரையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டு உள்ளது. விவேகானந்தா கேந்திரா நன்கொடையாக வழங்கிய ஐந்தரை ஏக்கர் நிலத்தில் ரூ.22.5 கோடி செலவில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதி சன்னதி, பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதிகளும், கருடபகவான் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரமோற்சவம், தேரோட்டம், தெப்பத்திருவிழா போன்ற அனைத்து விழாக்களும், அதே நாளில் அதே நேரத்தில் இங்கு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோயிலின் கீழ் தளத்தில் அன்னதான மண்டபம், முடி காணிக்கை மண்டபம், அலுவலகம், சீனிவாச கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேல்தளத்தில் ஏழுமலையான் வெங்கடாசலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, மூலஸ்தான கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பிரமோற்சவம் அன்று வெங்கடாசலபதி பாதத்தில் சூரிய ஒளி விழும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அண்மையில் கும்பாபிஷேகம் நடந்தது.
கன்னியாகுமரி கடலோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏழுமலையான் கோயில் பக்தர்களால் கடல் திருப்பதி என அழைக்கப்படுகிறது. வெங்கடாஜலபதி சன்னதிக்கு செல்லும் மேல் தளத்தில் 45 படிக்கட்டுகள் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் படியேறிச் செல்லலாம். வெங்கடாஜலபதி சன்னதியில் நின்றவாறே விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், மற்றும் கடற்கரையின் எழில்மிகு அழகையும் கண்டு ரசிக்க முடியும். திருப்பதியில் நடக்கும் அனைத்து பூஜை முறைகளும் இங்கும் கடைபிடிக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்தே லட்டு பிரசாதத்தை கன்னியாகுமரிக்கு கொண்டு வந்து பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பாரத மாதா ஆலயம்: கன்னியாகுமரி கடற்கரை விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ளது. மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 25 கோடி செலவில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பாரத மாதா கோயிலுடன் இராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடம் அமையப் பெற்றுள்ளது. இங்கு 5.5 டன் எடையும், 15 அடி உயரமும் கொண்ட பாரத மாதாவின் ஐம்பொன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லை நடராஜர் சிலை, பகவதி அம்மனின் தவக்கோல காட்சி, சுவாமி விவேகானந்தர் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரங்கத்தின் நடுவில், ஓம் என்ற எழுத்துடன் பாரத நாட்டின் வரைபடமும், மாதா அமிர்தானந்தமயி படமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்புறத்தில் 18 அடி நீளம், 12 அடி அகலத்தில் மூன்று முப்பெரும் சித்திரங்களாக ராமர் பட்டாபிஷேகம், ராமேஸ்வரத்தில் ராமர், சீதை சிவலிங்க பிரதிஷ்டை செய்யும் காட்சி மற்றும் பத்மநாபசுவாமி அனந்தசயன காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் வால்மீகி இராமாயணத்தின் 108 முக்கிய சம்பவங்கள், 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இந்த இராமாயணக் கண்காட்சி கூடத்தின் முன்பு, 12.5 டன் எடையும், 27 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லில், 27 அடி உயர அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோயிலின் முகப்பு பகுதியில் நீருற்றுடன் கூடிய பூங்காவும் பூங்காவின் உள்ளே, 32 அடி உயரத்தில் சிவபெருமானின் தவக்கோலக் காட்சி சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஷீரடி சாய்பாபா கோயில்: கன்னியாகுமரியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் பொத்தையடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வருகின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அழகிய வடிவமைப்புடன் உள்ளஇந்த கோயிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய பூமி, புதிய புதிய கோயில்களால் ஆன்மிக பூமியாகி விட்டது. சுற்றுலா பயணிகளுக்கும் ஆன்மிக ஆர்வலர்களுக்கும் ஏற்ற தலமாக கன்னியாகுமரி உள்ளது.